தேர்தல் களம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து, பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

By 
upup1

மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் இருந்து பிரதமர் மோடி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அதேசமயம், மூன்றாவது முறையாக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதாவது, மக்களவை தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

ஆனால், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, ஆட்சி மீது ஏற்படும் அதிருப்தி ஆகியவை அக்கட்சிக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், மக்களவை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளது. இந்த உத்வேகத்தில் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை பாஜக ஏற்கனவே தொடங்கி விட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்புக்காக காத்திருந்த அக்கட்சி, கோயில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், அடுத்தக்கட்டமாக தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

அந்த வகையில், பாஜகவின் முகமான பிரதமர் மோடி, மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நாளை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமர் கோயில் திறப்பையடுத்து, புலந்த்ஷாஹரில் நாளை நடைபெறவுள்ள பேரணி மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

நாளை மறுநாள் குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்வின்போது, பிரதமர் மோடி கட்டாயம் டெல்லியில் இருந்தாக வேண்டும். எனவே, ராமர் கோயில் திறக்கப்பட்டதையடுத்து, வாக்குகளை கவரும்  பொருட்டு சம்பிரதாயப்படி முதன்முதலாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உத்தரப்பிரதேசத்தின் மேற்கு நகரமான புலந்த்ஷாஹரில் பாஜகவுக்கு கணிசமாக வாக்குகள் உள்ளன. இதனை எதிர்பார்த்து, கட்சி தொண்டர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள 14 இடங்களில் 8 இடங்களை பாஜக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே, இந்த பிராந்தியத்தில் இந்த முறை அனைத்து இடங்களிலும் வெற்றி பெற பிரதமர் மோடி தயாராகி வருவதாக கூறப்படுகிறது. புலந்த்ஷாஹரில் நடைபெறும் பிரதமர் மோடியின் பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே, மக்களவைத் தேர்தலில் ராஷ்டிரிய லோக்தளத்துடன் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்தியா கூட்டணி வலுவாக இருக்கும் பொருட்டு, மாநிலத்தில் தொகுதி பங்கீடுக்காக காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் பல பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டியதிருக்கும் என்றார்.

முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்சிகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் லக்னோவில் ஆலோசனை நடத்திய அகிலேஷ் யாதவ், தொகுதி பங்கீட்டின் முடிவுதான் வெற்றியின் அளவுகோல் என்றார்.

Share this story