மேடையில் பாமக நிறுவனர் ராமதாசுடன் பிரதமர் மோடி காட்டிய நெருக்கம்..மகிழ்ச்சி..

By 
selam

சேலம் பொதுக்கூட்ட மேடையில் பாமக நிறுவனர் ராமதாசுடன் பிரதமர் மோடி காட்டிய நெருக்கம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முதற்கட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ல தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி நடப்பாண்டில் மட்டும் 5 முறைக்கு மேல் வந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

ஏற்கனவே, திருப்பூர், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, கோவையில் நடந்த பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நேற்று இரவு கோவையில் தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன், பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார்.

தொடர்ந்து, சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் முதல் முறையாக பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் பாஜக - பாமக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சரத்குமார், ஜி.கே.வாசன், ஏசி சண்முகம், அன்புமணி ராமதாஸ், ஜான் பாண்டியன், பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மேடைக்கு வந்த பிரதமர் மோடி பாமக நிறுவனர் ராமதாஸை பார்த்ததும் நெகிழ்ச்சியடைந்தார். அவரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி அவருடன் சிறிது நேரம் பேசினார். பின்னர், மோடிக்கு ராமதாஸ் சால்வை அணிவித்தார். அப்போது அவரை கட்டியணைத்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த மேடையிலேயே மூத்த அரசியல் தலைவர் மருத்துவர் ராமதாஸ் என்பது கவனிக்கத்தக்கது.

Share this story