சென்னை-நெல்லை இடையே ரயில் சேவை : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

By 
vande4

இந்திய ரெயில்வே துறை சார்பில் ரெயில் பயணத்தை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, உலகத்தரத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயண தூரத்தை அதிவேகத்தில், கடப்பதால் இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் வந்தே பாரத் ரெயிலான சென்னை-கோவை ரெயிலை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

தென் மாவட்டங்களுக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பயணிகள் கோரிக்கை வலுத்தது. அதன் அடிப்படையில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே துறை அனுமதி அளித்தது.

இந்த ரெயிலை காணொலி காட்சி வாயிலாக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவர் மன் கீ பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மதியம் இந்த வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரெயிலுடன் விஜயவாடா-சென்னை சென்ட்ரல், பெங்களூரு (யஸ்வந்த்பூர்)-ஐதராபாத் (கச்சிகுடா), காசர்கோடு-திருவனந்தபுரம் (வழி ஆலப்புழா), பூரி-ரூர்கேலா, உதய்பூர்-ஜெய்ப்பூர், பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-அகமதாபாத் (சபர்மதி) ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

முதல் நாளான இன்று பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பிரதமர் பேசுகின்ற மன் கீ பாத் நிகழ்ச்சியை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைத்து கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியிலும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்திருந்தனர்.

நெல்லை சந்திப்பில் இருந்து தற்போது ரெயில் புறப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வரை ரெயிலில் பயணம் செய்தார். இதேபோல மத்திய மந்திரி எல்.முருகன் திருச்சி வரை பயணம் செய்தார். தொடர்ந்து இந்த ரெயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சில நிமிடங்கள் நின்று செல்கிறது.

நெல்லையில் இருந்து வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. இந்த பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்றே தொடங்கி விட்டது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் இந்த ரெயிலின் முன்பதிவு இருக்கைகள் நிரம்பின.

நாளை சென்னையில் இருந்து பயணிக்க மட்டும் குறைந்த அளவு இருக்கைகள் இருந்தன. இந்த ரெயிலில் சாதாரண ஏ.சி. பெட்டிகளில் உணவுடன் சேர்த்து பயணிக்க ரூ.1,620 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. எக்சிகியூட்டிவ் ஏ.சி. பெட்டிகளில் ரூ.3,005 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பயணிகளுக்கு காலையில் டீ, காலை உணவு, மதிய உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ரெயிலில் டீ, ஸ்நாக்ஸ், இரவு உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

உணவு தேவை இல்லை என்றால் டிக்கெட் எடுக்கும்போதே அதனை தவிர்க்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 652 கிலோமீட்டர் தூரத்தை 110 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து 7 மணி நேரம் 50 நிமிடத்திற்குள் அடைந்துவிடும் வகையில் இந்த ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்கள் தங்களது கை குழந்தைகளுடன் தனியாக பயணம் செய்யும் போது கழிப்பறைக்கு செல்லவேண்டி இருந்தால் குழந்தையை அங்கு கொண்டு சென்று உட்கார வைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 8 பெட்டிகளிலும் பாதுகாப்புக்காக தலா 2 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாசல் பகுதியிலும் தலா 2 சி.சி.டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முற்றிலும் சென்சார் மயமாக்கப்பட்டுள்ளதால் ரெயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக வந்தால் மட்டுமே ரெயிலில் ஏற முடியும். மற்ற ரெயில்களை போல ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய முடியாது. அவ்வாறு படிக்கட்டில் நின்றால் ரெயில் அங்கிருந்து நகராத வகையில் இந்த ரெயில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் உள்ளே சென்ற பின்னர் கதவுகள் தானாகவே மூடிக்கொள்ளும். அதன் பின்னரே ரெயில் புறப்பட முடியும். 


 

Share this story