காதல் கணவர் மீது காவல்துறையில் புகார்.! யார் இந்த பீலா ஐஏஎஸ்.?

By 
peela

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைதண்டனைக்கு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் இடைக்கால தடை வாங்கிவிட்டார். ஆனால், அவரின் குடும்பத்தில் பெரும் புயல் வீசிக்கொண்டிருக்கிறதாம்.. ஆம்.. ராஜேஸ் தாஸின் மனைவி தனது பெயரை பீலா ராஜேஷ் என்பதில் இருந்து பீலா வெங்கடேசன் என்று மாற்றியதுடன், விவாகரத்து கோரியும் வழக்கு தொடர்ந்தார். 

இந்த சூழலில் தான் பீலாவுக்கும் ராஜேஸ் தாஸுக்கும் இடையே தையூர் பங்களா தொடர்பாக மோதல் மூண்டுள்ளது. தையூரில் உள்ள தனது வீட்டில் ராஜேஸ் தாஸ் உள்ளிட்டோர் அத்துமீறி நுழைந்ததாகவும், செக்யூரிட்டியை தாக்கியதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் ராஜேஸ் தாஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது போலீஸ்.. 

இதையடுத்து ராஜேஸ் தாஸை கைது செய்த போலீஸ் அவரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது ராஜேஸ் தாஸுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் கூறியதால் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தது திருப்போரூர் நீதிமன்றம்..

சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வெங்கடேசன், ராணி தம்பதிக்கு, 1969-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பிறந்தவர் பீலா. அவரின் தந்தை வெங்கடேசனுக்கு தூத்துக்குடி தான் சொந்த ஊர். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் தான் வெங்கடேசன். இவரின் தாய் ராணி நாகர்கோயிலை சேர்ந்தவர்கள். 

சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் ராணி இருந்திருக்கிறார். வெங்கடேசன், ராணி தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஒரு மகனும், மகளும் வெளிநாட்டில் இருக்க பீலா மட்டும் தான் சென்னையில் இருக்கிறார்.

பள்ளிப் படிப்பை முடித்த பின் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து டாக்டர் ஆனார். அதன்பின்னரே ஐஏஎஸ் படித்தார். தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பீலா, ஒடிசாவை சேர்ந்த ராஜேஸ் தாஸ் என்பவரை 1992-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிங்கி, ப்ரீத்தி என 2 மகள் உள்ளனர்.

செங்கல்பட்டு துணை ஆட்சியராக இருந்த, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். மீன்வளத்துறையின் திட்ட இயக்குனராக இருந்துள்ளார். மத்திய ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இயக்குனராகவும் பீலா பணியாற்றினார். 2019-ம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு எரிசக்தி துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 

 

 

Share this story