போலீஸ் அருங்காட்சியகம் : 165 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகள்..பொதுமக்கள் ஆர்வமாய் கண்டுகளிப்பு..

By 
Police Museum 165 years of historical events.

சென்னை எழும்பூரில் உள்ள பழமை வாய்ந்த போலீஸ் கமி‌ஷனர் அலுவலக கட்டிடம் போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

வரலாற்று நிகழ்வுகள் :

இங்கு தமிழக காவல்துறையின் 165 ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகள், வரலாற்று பெட்டகமாக தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆவணம் தொடங்கி, தற்போதைய நிகழ்வுகள் வரை, தமிழக காவல்துறையின் சிறப்பு அம்சங்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை கடந்த 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்று அருங்காட்சியகத்தை மாணவ- மாணவிகள் பலர் சுற்றிப் பார்த்தனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

2 நாட்கள் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் சுற்றிப் பார்க்க கட்டணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதன்படி 29, 30 ஆகிய 2 நாட்களும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அருங்காட்சியகத்தை இலவசமாக சுற்றிப் பார்த்தனர்.

அருங்காட்சியகம் திறக்கப்பட்ட முதல் நாளான 28-ந் தேதி அன்று 200 பேரும், மறுநாள் 29-ந்தேதி 830 பேரும், நேற்று (30-ந்தேதி) 750 பேரும் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்துள்ளனர். இதன் மூலம் 3 நாட்களில் 1,780 பேர் போலீஸ் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்துள்ளனர்.

இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி, பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டது. 

 இரவு 7 மணிவரை :

பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும், போலீஸ் அருங்காட்சியகத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகிறார்கள். 

தினமும் காலை 11 மணியில் இருந்து இரவு 7 மணி வரை அருங்காட்சியகத்தை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

கோரிக்கை :

போலீஸ் அருங்காட்சியக பொறுப்பாளராக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரதிதேவி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கீழ் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 13 காவலர்கள் ஆகியோரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பொதுமக்களை ஒழுங்குப்படுத்தி உள்ளே செல்லவும், அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறார்கள்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்கும் ஆசையில், பொதுமக்கள் முன் கூட்டியே வந்து விடுகிறார்கள். காலை 10 மணிக்கே மக்கள் வந்து விடுகிறார்கள்.

எனவே, காலையில் அருங்காட்சியகம் திறக்கும் நேரத்தை 11 மணியில் இருந்து 10 மணியாக மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this story