அரசியல் சர்கார் : தென் மாவட்டங்களை குறி வைக்கிறாரா விஜய்.?

By 
vj7

நடிகர் விஜய், தன்னுடைய அரசியல் பயணத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், அடுத்த கட்டமாக, மாநாடு நடத்துவது மற்றும் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2ஆம் தேதி 'தமிழக வெற்றி கழகம்' என்கிற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்த நிலையில்,  கட்சி பெயரை அறிவித்த பின்னர் முதல் முறையாக செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செயற்கு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கேரளாவில் இருந்தும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறி இருந்தார். மேலும் தற்போது விஜய் புதுவையில் நடைபெற்று வரும் 'GOAT' படப்பிடிப்பில் உள்ளதால், இந்த செயற்குழு கூட்டத்தில் நேரடியாக பங்கேற்காமல் காணொலி மூலம் பங்கேற்று சுமார் 5 நிமிடங்கள் மாவட்ட நிர்வாகிகளுடனும் தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, மக்கள் சொல்லும் விமர்சனங்களை இன்முகத்துடன் கடந்து செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களின் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்ததாகவும்,  2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, குக்கிராமங்களில் கூட கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். 80 வயதில் உள்ளவர்களுக்கும் நம் கட்சி பற்றி தெரிந்திருக்க வேண்டும்” என அன்பால் கட்டளை போட்டதாக கூறப்படுகிறது.

கட்சி துவங்கியதுமே.. அரசியலின் நோக்கம் அறிந்து விஜய் செயல்பட்டு வரும் நிலையில்... விரைவில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம். தென் மாவட்டங்களை குறிவைத்து விரைவில் தூத்துக்குடி அல்லது நெல்லையில் தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில், மாநாடு நடப்படும் என கூறப்படுகிறது.

அதே போல் விஜய்... 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில், விஜய் தூத்துக்குடி அல்லது நாகை மாவட்டத்தை டார்கெட் செய்து, அரசியல் களம் காண உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது வரை வெளியாகியுள்ள தகவலில் விஜய் எந்த கட்சியுடனும், கூட்டணி வைத்து செயல்படாமல் 234 தொகுதியிலும் தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

 

 

Share this story