பொங்கல் விழா.. சென்னையில் இருந்து 11,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்..

By 
sbus

இந்த 2024 ஆம் ஆண்டு மிக நீண்ட வார இறுதியோடு இணைந்து பொங்கல் விழா வரவுள்ள நிலையில், பெரிய அளவில் மக்கள் தலைநகர் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கும். அதே போல தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கும் அதிக அளவில் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது என்றும், சென்னையிலிருந்து மட்டும் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் ஊர் திரும்ப வசதியாக ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இது மட்டுமில்லாமல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாகத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் புறப்படும் இடம் :

பெங்களூருவுக்கு செல்லும் SETC பேருந்துகளும், கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்படும். அதேபோல NH-45 வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். 

இந்த இரண்டு பேருந்து நிலையங்களை தவிர வேறு எங்கிருந்தும் SETC பேருந்துகள் இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. செஞ்சி மார்க்கமாக செல்லவிருக்கும் பேருந்துகள் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். 

அதேபோல திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், திட்டக்குடி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், பொள்ளாச்சி, ராமநாதபுரம், சேலம் மற்றும் கோவை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட உள்ளது. 

அதுபோல கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் மீண்டும் பொங்கல் முடிந்து சென்னைக்கு திரும்பும் போது அவை நேரடியாக கோயம்பேடு வராமல் கிளாம்பாக்கம் சென்றடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Share this story