ஜனாதிபதி வருகை : மதுரை-கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு

murmu5

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நாளை (18-ந் தேதி) தமிழகம் வருகிறார். மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவாரத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

இதற்காக ஜனாதிபதி, நாளை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் அவர், அங்கு சாமி தரிசனம் செய்கிறார். தரிசனத்தை முடித்து கொண்டு, மீண்டும் மதுரை விமான நிலையம் செல்லும் திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் பிற்பகல் 3.10 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வரவேற்பை ஏற்று கொண்ட பின்னர் காரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தொண்டாமுத்தூர் வழியாக காரில் ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார். அங்கு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கம், சூரிய குண்டகுளம் ஆகிய இடங்களுக்கு சென்று வழிபடுகிறார். பின்னர் ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகா சிவாரத்திரி விழாவில் ஜனாதிபதி முர்மு பங்கேற்கிறார். சிறிது நேரம் கலை நிகழ்ச்சிகளை பார்க்கும் அவர், மீண்டும் அங்கிருந்து காரில் கோவை ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்குகிறார்.

19-ந் தேதி காலை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் ஜனாதிபதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதியை வருகையை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவையிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் ஆயிரம் போலீசார் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்காக இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செல்லும் பாதை குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகையும் நடக்கிறது.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள லாட்ஜூகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு தங்கி இருப்பவர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

யாராவது சந்தேகத்திற்கிடமாக இருந்தால் அவர்கள் குறித்து உடனடியாக தகவல் கொடுக்கவும் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள சோதனை சாவடிகளிலும் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Share this story