நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி வேண்டுகோள்..

By 
pmm5

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இன்று 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பல பகுதிகளில் அவதியடைந்தனர். மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடர்களுக்கு மத்தியில் மக்கள் அனைவரும் கூட்டு முயற்சியின் ஆற்றலை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினர்.

வெள்ளத்தின் போது நிவாரண பணிகளை மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த உலகளாவிய நலனுக்கான உணர்வே இந்தியாவின் அடையாளம் மற்றும் இந்தியாவின் பலம்.

இந்த மழைக் காலம் மரம் வளர்ப்பதற்கும், நீர் பாதுகாப்புக்கும் சமமாக முக்கியமானது. மக்கள் முழு விழிப்புணர்வு, பொறுப்புடன் நீர் பாதுகாப்புக்கான புதிய முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 30 கோடி மரக்கன்றுகள் நட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களின் பங்கேற்பு, விழிப்புணர்வுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

அமெரிக்கா, நூற்றுக்கும் மேற்பட்ட அரிய மற்றும் பழமையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது. இந்த கலைப்பொருட்கள் 2,500 ஆண்டுகள் பழமையானவை.  இவை டெரகோட்டா, கல், உலோகம், மரம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை. இதில் 11-ம் நூற்றாண்டின் அழகிய மணற்கல் சிற்பமும் ஒன்று. இது மத்திய பிரதேசத்தின் அப்சரா நடனத்தின் கலைப்படைப்பாகும்.

சோழர் காலத்தின் பல சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. தேவி மற்றும் முருகன் சிலைகள் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இவை தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரத்துடன் தொடர்புடையவை. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் செய்ய சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. இதற்காக கொள்கைகளில் மாற்றம் செய்த அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாம் அனைவரும் விழாவை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். சுமார் 2 லட்சம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சுதந்திர தின விழாவுக்கு மத்தியில் நாட்டில் மற்றொரு பெரிய பிரசாரம் தொடங்கப்பட உள்ளது. நமது துணிச்சலான தியாகிகளை கவுரவிக்கும் வகையில் பிரசாரம் தொடங்கப்படும். வீரமரணம் அடைந்த வீரர்களை கவுரவிக்கும் வகையிலும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையிலும் நாடு முழுவதும் 'என் மண் என் நாடு' என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த ஆளுமைகளின் நினைவாக லட்சக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கல்வெட்டுகள் நிறுவப்படும். இந்த பிரசாரத்தின் போது அம்ரித கலச யாத்திரை நடத்தப்படும். நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் 7,500 கலசங்களில் மண் சுமந்து செல்லும் இந்த கலச யாத்திரை தலைநகர் டெல்லியை சென்றடையும். இந்த பயணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரக் கன்றுகளும் கொண்டு வரப்படும். தேசிய போர் நினைவிடம் அருகே 7,500 கலசங்களில் வரும் மண் மற்றும் மரக்கன்றுகளை வைத்து 'அமிர்த வாடிகர்' கட்டப்படும். இது நாட்டின் மாபெரும் அடையாளமாக மாறும்.

கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும். இதன் மூலம் நமது கடமைகளை உணர்வோம். நாட்டின் சுதந்திரத்திற்காக செய்த எண்ணற்ற தியாகங்களை உணர்வோம். சுதந்திரத்தின் மதிப்பை உணர்வோம். இந்த முயற்சிகளில் ஒவ்வொரு மக்களும் இணைய வேண்டும். இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் அனைவரும் அங்கம் வகிப்போம்.

சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நாம் எப்போதும் நினைவு கூற வேண்டும். அவர்களின் கனவுகளை நனவாக்க இரவு-பகலாக உழைக்க வேண்டும். மக்களின் இந்த கடின உழைப்பையும், கூட்டு முயற்சியையும் முன்னுக்கு கொண்டு வருவதற்கான ஒரு இணைப்பு பாலமே இந்த மான் கி பாத் நிகழ்ச்சி ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
 

Share this story