கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை  நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை..

By 
nirmala5

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக நிர்மலா தேவி என்பவர் பணியாற்றி வந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர்கல்வித்துறையிலும் பெரும் செல்வாக்குடன் இருந்த இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, தவறாக வழிநடத்தியதாக கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, பாலியல் ரீதியாக மாணவிகளை அவர் பயன்படுத்த முயன்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நிர்மலா தேவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை தொடர்பிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், வழக்கின் தன்மையை கருதி சிபிசிஐடி போலீசாரிடம் வழக்கின் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபட்டதால், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஏப்ரல் 19ஆம் தேதியன்று தனியாக ஒரு விசாரணைக்குழுவை தன்னிச்சையாக அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார்.

தொடர் விசாரணையின் அடிப்படையில், துரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில்நுட்ப முறைக்கேடு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இறுதியாக, நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள் என இறுதி செய்யப்பட்டு, அவர்கள் மூவர் மீதும் சுமார் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விருதுநகரில் உள்ள 2ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் முதலில் நடைபெற்று வந்தது. பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இதனிடையே, நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டில் ஜாமீன் வழங்கப்பட்டது.

நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, கடந்த 26ஆம் தேதி தேர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் இவ்வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 29ஆம் தேதி (நேற்று) வழங்கப்பட்டது. அதன்படி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேசமயம், 2ஆம் மற்றும் 3 ஆம் குற்றவாளிகளான முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட உதவிப் பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 30ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நிர்மலா தேவியால் எந்த ஒரு மாணவிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், நிர்மலா தேவிக்கான தண்டனையை குறைக்க கூடாது; அவருக்கான  குறைந்தபட்ச தண்டனை வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story