புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு : அமைச்சர்கள் தொடங்கி வைப்பு
 

By 
Jallikattu in Pudukkottai Deposits started by ministers

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில், இந்த ஆண்டின் (2022) முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில், 2-வது ஜல்லிக்கட்டுப் போட்டி ஆலங்குடி அருகே வன்னியன் விடுதி கிராமத்தில், இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதில், மொத்தம் 700 காளைகள் பங்கேற்றுள்ளன. மாடு பிடி வீரர்கள் 250 பேர் கலந்து கொண்டுள்ளனர். 

வாடிவாசல் வழியாக, காளைகள் சீறிப்பாய்ந்து செல்கின்றன. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். 

ஒரு சில காளைகள் களத்தில் நின்று விளையாட்டு காட்டின. இதனைக் கண்ட மாடுபிடி வீரர்கள் அச்சத்தில் ஒதுங்கி, தடுப்புக் கம்பிகளில் ஏறி நின்றனர். 

ஒரு சிலர், காளையை அடக்க முயன்றபோது காளைகள் அவர்களை புரட்டிப் போட்டு பந்தாடியது.

பரிசுப் பொருட்கள் :

தொடர்ந்து, காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. 

இதனை பொதுமக்கள் ஏராளமானோர் நின்று பார்த்து ரசித்து கைத்தட்டி, ஆரவாரம் செய்து வருகின்றனர். 

காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் அடங்காத காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்க நாணயம், வெள்ளி நாணயம், ரொக்கப்பரிசுகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

மக்கள் பிரதிநிதிகள் :

முன்னதாக போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

அப்போது கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர். 

காளைகள் முட்டியதில் இதுவரை 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கேயே மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காலையில் சாப்பாடு, குடிநீர் வசதி இல்லாததால் டாக்டர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் திடீரென சாப்பிட செல்வதாக கூறிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பானது. 

அதன்பின், அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின் பணியை மேற்கொண்டனர்.
*

Share this story