தமிழகத்தில் மழை : வானிலை இலாகா முக்கிய அறிவிப்பு
 

By 
Rain in Tamil Nadu Meteorological Department important announcement


கடந்த மே மாதம் வங்கக்கடல் பகுதியில் புயல் ஏற்பட்டது. ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்ட அந்த புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது. 

இந்நிலையில், வங்கக்கடலில் அந்தமானுக்கும்-தமிழகத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் மேகக்கூட்டம் பெருமளவில் திரண்டுள்ளது.

இது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது சம்பந்தமாக வானிலை இலாகா வெளியிட்டுள்ள செய்தியில், 

‘நாளை மறுநாள் (11-ந்தேதி) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அது ஆந்திரா, ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே சென்னை நகரில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

இன்று நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதேபோல நாளை நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக பலத்த மழையும், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் கூறியுள்ளனர்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்தால், புயலாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறு புயல் ஏற்பட்டால், அதன் மூலம் தமிழகத்தில் அதிகளவில் மழை பெய்யும்.

Share this story