யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு? - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து..

By 
courth1

சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி முன்ஜாமீன் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது. நேர்காணல் கொடுக்க வருபவர்களை அவதூறான கருத்துகளைத் தெரிவிக்க தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யுடியூப் சேனலின் முதன்மைச் செயல் அதிகாரி சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயரதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் எழுந்தன. கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையின் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

தொடர்ந்து, மே 4-ம் தேதி தேனியில் இருந்த சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 'சவுக்கு ஆவேசம்... இப்படியும் செய்யுமா காவல் துறை!' என பதிவிட்டு, பெண் காவலர்கள் குறித்த சவுக்கு சங்கரின் வீடியோவை வெளியிட்ட ‘ரெட் பிக்ஸ்’ தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், முன்ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது. நேர்காணல் கொடுக்க வருபவர்களை அவதூறான கருத்துகளைத் தெரிவிக்க தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த முன்ஜாமீன் மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இதனிடையே, சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதேவேளையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரித்துள்ளது.

Share this story