ரூ.2,000 நோட்டுகள் இனி பெறப்படாது : திடீர் அறிவிப்பு..

By 
2000rs

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களிடம் குறைவான அளவே புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகள் நாளை மறுநாளுக்கு(செப்டம்பர் 30-ந்தேதி) பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து வங்கிகள் மூலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடங்கியது. கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் இந்த நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர். இந்த சூழலில் காலக்கெடு முடிவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பஸ்களில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று கண்டக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றால், அதற்கு கண்டக்டர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதேபோல் சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர்.

இதே போல பெட்ரோல் பங்குகளிலும் இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 5,900 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 

Share this story