குழந்தைகள் விற்பனை : காப்பக அதிபர் தலைமறைவு..திடுக்கிடும் தகவல்கள்..

Sale of children Archbishop disappears..shocking information ..

மதுரை காப்பகத்தில் கொரோனாவால் இறந்ததாக கூறி நாடகமாடி, போலி ஆவணங்கள் மூலம் குழந்தைகளை விற்ற சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ரிசர்வ் லைன் குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ்ட் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தின் உரிமையாளராக சிவக்குமாரும் நிர்வாகியாக மதார்ஷா என்பவரும் இருந்து வந்தனர்.

இங்கு முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் என 80-க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

குழந்தை புதைப்பு ? :

இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் தனது கிராமத்தில் ஆதரவின்றி தவித்த ஐஸ்வர்யா (வயது22) மற்றும் அவரது 3 குழந்தைகளை இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவின் 3-வது குழந்தை மாணிக்கம் கொரோனா தொற்றுக்கு பலியாகி விட்டதாகவும், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் தத்தனேரி சுடுகாட்டில் குழந்தை உடலை புதைத்து விட்டதாகவும் காப்பகத்தில் இருந்து அசாருதீனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் அனுப்பிய ஆவணங்கள் மீது அசாருதீனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

புகார் :

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தைகள் நல அலுவலர் மற்றும் போலீசார் காப்பகத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது, பல்வேறு முரண்பட்ட தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து விசாரிக்க சிவக்குமார், மதார்ஷா ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இதனால், மேலும் சந்தேகம் அடைந்த மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் சண்முகம், பாண்டியராஜன், சாந்தி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கணேசன், சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா ஆகியோர் அடங்கிய குழு அதிரடி விசாரணையில் இறங்கியது.

குழந்தை மாணிக்கத்தின் தாயார் ஐஸ்வர்யாவிடம் விசாரித்தபோது, கடந்த 13-ந்தேதி எனது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாகவும் காப்பக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதன் பின்னர், குழந்தை இறந்து விட்டதாகவும், அதனை தத்தனேரி சுடுகாட்டில் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அடக்கம் செய்து விட்டதாகவும் கூறி என்னை அழைத்து சென்று, ஒரு இடத்தை காண்பித்தனர்.

அங்கு இறுதிச்சடங்கு செய்யும்படி கூறினர். அதை புகைப்படமாக எடுத்துக் கொண்டனர். நான் எனது குழந்தையை 13-ந்தேதிக்கு பிறகு பார்க்கவில்லை என தெரிவித்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மாநகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரி கொடுத்ததாக, காப்பக நிர்வாகிகள் வைத்திருந்த ஆவணங்களை பரிசோதித்தனர்.

இதில், தத்தனேரி சுடுகாட்டில் மாணிக்கம் உடல் புதைக்கப்பட்டதற்கான ரசீது எண் கடந்த மே மாதம் 75 வயது முதியவர் ஒருவர் எரிக்கப்பட்டதற்கான ரசீது எண் என தெரியவந்தது. இதன் மூலம், போலி ஆவணங்கள் மூலம் மோசடி நடந்து இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், குழந்தை மாணிக்கம் உடலை புதைத்ததாக கூறப்பட்ட இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த விசாரணை குழு குழந்தை மாணிக்கம் எங்கே? என விசாரணையில் இறங்கினர். இதில், மதுரை இஸ்மாயில்புரம் 4-வது தெருவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கண்ணன்-பவானி தம்பதியருக்கு ரூ.5 லட்சத்திற்கு குழந்தை மாணிக்கத்தை விற்று இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையில், காப்பகத்தில் இருந்த ஸ்ரீதேவி என்பவரின் பெண் குழந்தையும் விற்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த குழந்தை கருப்பாயூரணி கல்மேடு பகுதியைச்சேர்ந்த அனீஷ்ராணி சக்குபாய்-சாதிக் தம்பதியரிடம் இருந்து மீட்கப்பட்டது.

16 குழந்தைகள் மாயம் :

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், போலீசார் காப்பகத்தில் உள்ள கம்ப்யூட்டர் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அங்கு பணியில் இருந்த கலைவாணி, கனிமொழி உள்ளிட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அரசு அனுமதி இல்லாமல் காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

ஆவணங்களை சோதனை செய்ததில், இங்கு 16 குழந்தைகள் இருந்ததும், தற்போது குழந்தைகள் மாயமாகி இருக்கும் அதிர்ச்சி தகவலும் அம்பலமானது.

இந்த குழந்தைகள் உடல் உறுப்புகளுக்காக விற்கப்பட்டு கடத்தப்பட்டதா? அல்லது குழந்தை இல்லாதவர்களுக்கு விற்கப்பட்டார்களா? என்பது மர்மமாக உள்ளது.

போலி ஆவணங்கள் :

போலி ஆவணங்கள் மூலம், மேலும் பல குழந்தைகள் விற்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலி ஆவணங்கள் தயாரிக்க யார்-யார் எல்லாம் சிவக்குமாருக்கு உடந்தையாக இருந்தார்கள்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காப்பகத்தில் இருந்த பதிவேடுகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கள், போன்றவற்றை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இல்லத்தில் போலீசார், சமூக ஆர்வலர்கள் என பலரும் வீதிகளில் தவிப்போர்களை கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இதனால், சிவக்குமார் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதனை பயன்படுத்தி அவர் ஆதரவற்ற குழந்தைகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளார்.

இதில், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

போலி இறுதிச்சடங்கு :

குழந்தைகளை விற்று விட்டு, இறந்ததாக அனைவரையும் நம்ப வைக்க சிவக்குமார் போலியாக இறுதிச்சடங்கும் நடத்தி வந்துள்ளார்.

ஐஸ்வர்யாவிடமும் குழந்தை இறந்து விட்டதாக கூறி குழந்தை புதைத்ததாக கூறிய இடத்தில் அவரை வைத்தே இறுதிச்சடங்கும் நடத்தினார். இதற்கான ஏற்பாட்டை மதார்ஷாதான் முன்னின்று செய்துள்ளார். 

இதுபோன்று, எத்தனை பேரை இப்படி அவர் ஏமாற்றினார்கள்? என தெரியவில்லை. இதற்கு காப்பகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

ஆதரவற்ற உடல்கள் :

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடலை புதைத்ததாக கூறி, பரிசு தொகையுடன் கூடிய அரசின் விருதை இல்ல பொறுப்பாளர்கள் பெற்றுள்ளனர். இதுவும் மோசடி செய்து பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாகவும் போலீசார் பலரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும், தலைமறைவான சிவக்குமார் சிக்கினால்தான் எத்தனை குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது? எவ்வளவு பணம் இதன் மூலம் கைமாறி உள்ளது? யார்-யாருக்கு எல்லாம் இதில் தொடர்பு உள்ளது? போன்ற விவரங்கள் தெரிய வரும்.

80 பேர் :

காப்பகத்தில் இருந்த 38 ஆண்கள், 35 பெண்கள், 7 குழந்தைகள் என மொத்தம் 80 பேர் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். 

தொடர்ந்து, இதயம் டிரஸ்ட் காப்பகத்திற்கு நேற்று இரவு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

காப்பக பொறுப்பாளர் கலைவாணி, குழந்தைகளை வாங்கிய அனீஷ்ராணி சக்குபாய்- சாதிக், கண்ணன் -பவானி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கனிமொழி, மணிமேகலை, மதார்ஷாவின் உறவினர்கள் உள்பட 7 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 தனிப்படை :

மேலும், தலைமறைவான சிவக்குமார், மதார்ஷா ஆகியோரை பிடிக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவின்பேரில், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

துணை கமி‌ஷனர் தங்கதுரை தலைமையில், 4 தனிப்படையினரும், தல்லாகுளம் உதவி கமி‌ஷனர் சேகர் தலைமையில் 4 தனிப்படையினரும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story