சவுக்கு சங்கர்.. குண்டர் சட்ட வழக்கு.. இரு நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து - அடுத்து நடக்கப்போவது என்ன.?

By 
savukku14

பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குண்டர் சட்ட வழக்கில், அந்த வழக்கை விசாரித்த இரு ஹை கோர்ட் நீதிபதிகளிடையே மாறுபட்ட கருத்து வெளியாகி உள்ளது.

சவுக்கு சங்கர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெலிக்ஸ் என்பவர் நடத்தி வரும் ரெட் பிக்ஸ் youtube சேனலுக்கு ஒரு பரபரப்பு பேட்டியை அளித்திருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவர் அவதூறாக பேசியதாகவும், குறிப்பாக தமிழக மகளிர் போலீசார் குறித்து பாலியல் ரீதியான கருத்துக்களை அவர் வெளியிட்டதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. 

இதனை அடுத்து கோவையை சேர்ந்த சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கடந்த மே 4ம் தேதி தேனியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் அவர் மீது சேலம், சென்னை, திருச்சி, உள்ளிட்ட சைபர் கிரைம் போலீசிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இறுதியாக அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதற்கு இடையில் ரெட் பிக்ஸ் youtube சேனலின் உரிமையாளர் Felix அவர்களும் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழலில் தான் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி அவருடைய தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து ஆவணங்களும் மதியம் 2.15 நிமிடங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு வழக்கின் விசாரணை நேற்று மதியம் 2.15 வரை ஒத்தி வைக்கப்பட்டது. 

அதன் பிறகு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் இடையே மாறுபட்ட கருத்து நிலவுவதால் மூன்றாவது நீதிபதி அமர்த்தப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வரை ஒருமையில் பேசிய விவகாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன் இன்று இறுதி விசாரணை நடத்தலாமா என்ற விஷயத்தில் தான் நீதிபதிகளிடையே மாறுபட்ட கருத்து நிலவியுள்ளது.

தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இந்த வழக்கில் இறுதி விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி பாலாஜி கூற, தமிழக அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படாவிட்டாலும் இன்றே இறுதி விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சுவாமிநாதன் கூற, இறுதியில் இன்று மாலை 6 மணி வரை சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

Share this story