மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை : கல்வித்துறை முக்கிய  அறிவிப்பு.. 

By 
dpi4

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும், இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.  

இந்த உதவித்தொகை மற்றும் ஊக்க தொகை, மாணவர்களுக்கு குறித்த நேரத்தில், நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய நேரடி பயனாளர் பரிமாற்றம் (டிபிடி) மூலம் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்திடும் முறை செயல்படுத்தப்படுகிறது. 

இவ்வாறு பரிமாற்றம் செய்வதற்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்களின் வயது அடிப்படையில், 2 நிலைகளில் வங்கி கணக்கு தொடங்கப்படவுள்ளது. 5 வயதிற்கு மேல் 10 வயது வரையுள்ள மாணவர்களுக்கும், 10 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் என இருநிலைகளில் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில், இணை கணக்காகவே துவங்கப்படும். இக்கணக்கினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பராமரிக்கத்தக்க வகையில் இருக்கும். இதற்கு ஆரம்பத் தொகை ஏதுமில்லாத பூஜ்ஜியத் தொகைக் கணக்காக துவங்கப்படும். அத்துடன் பள்ளிக்கு அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகங்களின் விவரங்கள் மற்றும் வங்கிகளின் விவரங்கள் தயாரித்து வைத்தல் வேண்டும். 

வங்கி கணக்குகளின் தகவல்களை, பள்ளி அளவில் எமிஸில் மாவட்டங்கள் வாரியாக பள்ளிகளின் எண்ணிக்கை கண்டறிந்து பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் தனியார் பள்ளி இயக்ககங்களிடம் வழங்கி பள்ளிகளில் வங்கிக் கணக்கு துவக்குதல் உறுதி செய்வார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் ஆதார் விபரம் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டதை உறுதிச் செய்வது தலைமை ஆசிரியரின் பொறுப்பாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this story