வேற்று கிரகவாசிகள் குறித்து, விஞ்ஞானிகள் விளக்கம்..

alien

பூமியை தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் பற்றிய விஞ்ஞானிகளின் தேடல் ஒருபுறம் நடந்து வந்தபோதிலும், வேற்று கிரகவாசிகளான ஏலியன்ஸ் பற்றிய சர்ச்சையும் தொடர்ந்து வருகிறது.

அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? இருக்கிறார்கள் என்றால் அவர்கள் உருவத்தில் எப்படி இருப்பார்கள்? எந்த பகுதியில், என்ன செய்து கொண்டிருக்கின்றனர் மற்றும் அவர்கள் மனிதர்களை போன்ற உருவம் கொண்டவர்களா? என்பன போன்ற ஆயிரக்கணக்கான விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன.

இந்த வேற்று கிரகவாசிகள் சில சமயங்களில் பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வந்து விட்டு செல்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. சில இடங்களில் விமானிகள் தங்களது பயணத்தின்போது, வேற்று கிரகவாசிகளை பார்த்து இருக்கிறோம் என்று கூறியுள்ளதும் இதற்கான தேடலை நீட்டிக்க செய்துள்ளது.

ஆனால், இதுவரை வேற்று கிரகவாசிகளை ஏன் கண்டறியவில்லை என விஞ்ஞானிகளின் முன் கேள்வியாக வைக்கப்படுகிறது.

நம்மை போன்று வேற்று கிரகங்களில் வசிக்க கூடிய ஏலியன்ஸ்கள் பற்றிய தேடலில், அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி அமைப்பு போன்றவையும் ஆர்வம் காட்டி வருகிறது. இதேபோன்று, சுவிட்சர்லாந்து நாட்டின் இகோல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் புள்ளியியல் உயிர்இயற்பியல் துறையில் ஆய்வாளராக இருப்பவர் கிளாடியோ கிரிமல்டி.

இவர், வேற்று கிரகவாசிகளை ஏன் ஒருபோதும் நாம் கண்டறிந்ததில்லை என்பதற்கான விளக்கங்களை நமக்கு தருகிறார். அவர் கூறும்போது, நாம் 60 ஆண்டுகளாகவே இந்த தேடலில் ஈடுபட்டு வருகிறோம்.

பூமியானது ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. அது வேற்று கிரகவாசிகள் வெளிப்படுத்தும் ரேடியோ அலைகளை கொண்டிருக்காமல் இருக்கலாம். ஆய்வு செய்யும் அளவை விட விண்வெளியானது, பரந்து, விரிந்து இருக்கிறது. அதனால், வேற்று கிரகவாசிகளின் பரிமாற்ற அலைகள் போதிய அளவுக்கு நம்மை சுற்றியுள்ள பகுதியை கடந்து போகாமல் இருக்க கூடிய சாத்தியமும் உள்ளது என்று கூறுகிறார்.

எனினும், நாம் சற்று பொறுமை காக்க வேண்டும் என அவர் கூறுகிறார். இந்த பிரபஞ்சத்தில் அவர்களை தொடர்பு கொள்வதற்கு வேண்டிய நேரம், முயற்சி மற்றும் பணம் ஆகியவை தேவையாக உள்ளது.

அவர்களை தேடும் அளவுக்கு தகுதியுடையவர்களாக நாம் இருக்கின்றோமா? என்று கூட சில விவாதங்கள் உள்ளன. நாம் வேற்று கிரகவாசிகளின் பரிமாற்ற அலைகளை அடைவதற்கு குறைந்தது 60 ஆண்டுகள் ஆகலாம்.

அவற்றை பற்றிய தேடுதலுக்கு விண்வெளியில் இன்னும் நிறைய இடங்கள் உள்ளன என விளக்கம் தரும் அவர், குறிப்பிடும்படியாக வேற்று கிரகவாசிகளை பற்றிய தேடலுக்காக நாம் பயன்படுத்தும் குறிப்பிட்ட தொலைநோக்கிகளை விட, பிற திட்டங்களுக்காக பயன்படுத்தும் தொலைநோக்கிகளில் கிடைக்க பெறும் தரவுகளில் உள்ள சமிக்ஞைகளை பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அதனால், பிற வான்இயற்பியல் ஆய்வுகளில் உள்ள தரவுகளை பயன்படுத்தும் கடந்த கால அணுகுமுறைகளை நாம் மீண்டும் பின்பற்றி முயற்சி செய்வது சிறந்த திட்டங்களில் ஒன்றாக இருக்கும். பிற நட்சத்திரங்கள் அல்லது பால்வெளி மண்டலங்களில் இருந்து கண்டறியப்படும் ரேடியோ அலைகளில் தொழில்நுட்ப சமிக்ஞைகள் எதுவும் உள்ளனவா? என்ற ஆராய்ச்சியை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

Share this story