அரசியல் பரபரப்பு: மக்களவைத் தேர்தலில் களம் காணும் ஏழு மத்திய அமைச்சர்கள்.. 

By 
bjp5

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்காக வருகிற 27 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த சிலருக்கு மீண்டும் அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது. ஆனால், ராஜ்யசபா உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்த 7 பேருக்கு பாஜக தலைமை வாய்ப்பளிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு மக்களவை தேர்தலில் அக்கட்சி வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல்தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோருக்கு மக்களவை தேர்தலில் பாஜக தலைமை வாய்ப்பளிக்கும் என தெரிகிறது.

தர்மேந்திர பிரதான், அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் உள்ள சம்பல்பூர் அல்லது தெக்னாலில் நிறுத்தப்படலாம். பூபேந்தர் யாதவ் ராஜஸ்தானின் அல்வார் அல்லது மகேந்திரகர் தொகுதியில் போட்டியிடலாம். பெங்களூருவில் உள்ள நான்கு தொகுதிகளில் ஒன்றில் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடலாம் என பாஜக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. பெங்களூருவின் மத்திய, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகள் பாஜக வசம் உள்ளது.

அதேபோல், குஜராத்தில் உள்ள பாவ்நகர் அல்லது சூரத்தில் மன்சுக் மாண்டவியா போட்டியிடலாம். பர்ஷோத்தம் ருபாலா, ராஜ்கோட்டில் போட்டியிடலாம். கேரளாவில் இருந்து முரளீதரன் களமிறக்கப்படலாம் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

ராஜ்யசபாவில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் (ஒடிசா) மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் (மத்திய பிரதேசம்) ஆகிய இரண்டு மத்திய அமைச்சர்களை மட்டுமே பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை பதவி வகித்த பாஜக மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை.

ஒரே விதிவிலக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மட்டுமே. கடந்த முறை இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து தேர்வான அவர், இந்த முறை குஜராத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். காங்கிரஸில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் உட்பட புதியவர்களுக்கும் பாஜக வாய்ப்பளித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ராஜ்யசபா பதவிக்காலம் முடிந்த 28 பேரில் 4 பேருக்கு மட்டுமே பாஜக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. மீதமுள்ள 24 பேரை மக்களவை தேர்தலில் களமிறக்க பாஜக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து அவர்களிடம் கருத்து கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this story