பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது ஏன்?

By 
dass

பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின்  சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. 

இந்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.20,500 அபராதம் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தண்டனை உறுதி செய்தது. 

இதனையடுத்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரி இருந்தார். இந்த வழக்கு பேலா திரிவேதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை  விதித்து வழக்கை ஒத்திவைத்தது. 

Share this story