போதை கடத்தல் கும்பலுடன், ஷாருக்கான் மகனுக்கு தொடர்பு? : அதிகாரிகள் விசாரணை

Shah Rukh Khan's son linked to drug trafficking gang  Authorities are investigating

மும்பையில் இருந்து கோவாவுக்கு, கடந்த சனிக்கிழமை சென்ற சொகுசு கப்பலில் போதை பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்திய 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். 

அவர்களில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் ஆவார். 

8 பேரிடமும் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணை :

நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 8 பேரையும் வருகிற 7-ந் தேதி வரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அனுமதி பெற்றுள்ளனர். 

அதன்படி, இன்று காலை ஆர்யன் கான் உள்பட 8 பேரிடமும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டது. 

அவர்களது செல்போனில் பதிவாகி இருந்த உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு 8 பேரும் அளித்த பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. வாக்கு மூலமாகவும் பெறப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு :

இதற்கிடையே ஆர்யன் கானின் வக்கீல் சதீஷ் கூறுகையில், “போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுவது போன்று ஆர்யன் கான் எந்த தவறும் செய்யவில்லை. இதற்கு முன்பு அவர் மீது எந்த வழக்கும் இல்லை. அவர் அனைத்து விசாரணைகளுக்கும் தயாராக இருக்கிறார்” என்று கூறி உள்ளார்.

ஆனால், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆர்யன்கான் மீது சந்தேகத்தை தெரிவித்து உள்ளனர். அவர்கள் கூறுகையில், “ஆர்யன் கானின் செல்போனில் பதிவாகி இருந்த தொடர்புகள் அனைத்தும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன. அடுத்தக்கட்ட விசாரணைகளில் தான் இது தொடர்பான தகவல்கள் தெரிய வரும்” என்றனர்.

ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று கோர்ட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரை உலகை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

ஆர்யன் கானின் செல்போனில் இடம்பெற்று உள்ள உரையாடல்களை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளில் ஒரு குழுவினர் தனியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

அந்த ஆய்வு முடிந்த பிறகுதான், ஆர்யன் கானுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குற்றச்சாட்டு :

இந்நிலையில், ஆர்யன் கானை மீட்க பாலிவுட் திரை உலகின் பல்வேறு தரப்பினரும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

இந்தி திரை உலகின் நடிகர், நடிகைகள் தொடர்ந்து ஷாருக்கானுடன் செல்போனில் பேசி ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த நடவடிக்கைகளை மும்பை போலீசார் கண்காணித்து வருவதாக தெரிகிறது. 

இதற்கிடையே ஆர்யன்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், போதைப்பொருள் பிரிவு சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சிறிதளவு வைத்திருந்தாலே, ஓராண்டு ஜெயில் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. 

வெளிநாட்டு போதைப் பொருட்களை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால், 10 ஆண்டுகள் வரை கூட தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. இதனால், ஆர்யன் கான் விசாரணை தகவல்களை பாலிவுட் திரை உலக பிரமுகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

Share this story