காதல் கணவனை கூலிப்படையை ஏவி, கொலை செய்த சம்பவம்: திடுக்கிடும் தகவல்கள்..

By 
murder13

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கொடிக்குளத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த்(42). பட்டுக்கோட்டை அருகே ஆண்டிகாடு கிராமத்தில் வசித்து வந்த இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி(35) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்பு கொடிக்குளத்தில் வாழ்ந்து வந்தனர். அப்போது ஆர்த்திக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளையராஜாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த கணவர்  ஸ்ரீகாந்த் மனைவியை கண்டித்தார். இதனால் கணவர் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய ஆர்த்தி திட்டமிட்டார். அதன்படி, இளையராஜா உதவியுடன் கூலிப்படையினரை ஏவி 2021ம் ஆண்டு நவம்பரில் ஸ்ரீகாந்த் அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிறுவாச்சி காட்டுப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவாடானை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆர்த்தி மற்றும் அவரது கள்ளக்காதலன் இளையராஜா மற்றும் கொலைக்கு தொடர்புடைய அஜித்குமாரை போலீசார் கடந்த ஏப்ரல் 22ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை சம்பந்தமாக கூலிப்படையைச் சேர்ந்த சமயத்துரை ஆசைமுத்துவை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த நெய் வியாபாரி வேல்முருகன் என்பவரை சில நாட்களுக்கு முன்பு கூலிப்படையினர் கொலை செய்தனர். இந்த வழக்கில் திருப்பாச்சேத்தி போலீசார் சமயத்துரையை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சூழலில் ஸ்ரீகாந்த் கொலையில் இவர் ஈடுபட்டதால் சமயதுரையை மீண்டும் கைது செய்யப்பட்டார். கைது செய்த கொலையாளியை திருவாடானை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் நீதிபதி பிரசாத் அவனை 15 நாள் சிறையில்  அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கூலிப்படை தலைவனை சிறையில் அடைத்தனர்

Share this story