மக்களவைக்குள் அத்துமீறியவர்கள் பயன்படுத்திய புகை கருவி: சண்டையிட்டு கொண்ட டிவி நிருபர்கள்..

By 
media6

நாடாளுமன்ற மக்களவையின் உள்ளேயும், வெளியேயும் அத்துமீறி தாக்குதல் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்த அடுத்த சில மணி நேரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்திய கீழே கிடந்த புகை உமிழும் கருவியை கைப்பற்றி அதனை பிடித்துக் கொண்டு செய்தி வெளியிட பத்திரிகையாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகை உமிழும் கருவியை பிடித்துக் கொண்டு நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் முழுவதையும் பத்திரிகையாளர் ஒருவர் விளக்க முற்படும்போது, ஒரு பெண்மணி உட்பட மேலும் சில பத்திரிகையாளர்கள் அந்த புகை உமிழும் கருவியை அவர் கையிலிருந்து பறிக்க முயற்ச்சிக்கின்றனர். அப்போது, அவர்கள் அனைவருமே கடுமையாகவும், ஆக்ரோஷமாகவும் காணப்படுகின்றனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கேமிராவில் பதிவானது. அத்துடன், செய்தி சேனலில் நேரலையில் ஒளிபரப்பானது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் வைரலாகி கேலிக்குள்ளாகியுள்ளது. நிருபர்களின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் இன்று பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இருவர்  அத்துமீறி இருக்கையில் குதித்தனர். தொடர்ந்து, அவையில் மையப்பகுதிக்கு செல்ல முயன்ற அவர்கள், தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். அதில் இருந்து வாயு வெளிப்பட்டது.

இதையடுத்து, எம்.பி.க்கள் உதவியுடன் அவர்களை பிடித்த அவைக் காவலர்கள் அவர்களை போலீசாரிசம் ஒப்படைத்தனர். அதேபோல், நாடாளுமன்றத்தின் வெளியேயும் இரண்டு புகை உமிழும் கருவியை வீசினர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

Share this story