வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி : திரளான மக்கள் பங்கேற்பு

Special return at Velankanni Cathedral Mass participation

கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இப்பேராலயம் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. 

இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு 11 மணிக்கு திருப்பலியுடன் தொடங்கியது. 

கூட்டு திருப்பலி :

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

பேராலய அதிபர் இருதயராஜ் கிருஸ்துமஸ் திருப்பலிகளை நிறைவேற்றினார். பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தைகள் பூஜைகளை நடத்தினர். 

திருப்பலிகளின் நிறைவில், இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார்.

அப்போது, அனைவரும் மண்டியிட்டு இயேசு துதி வாசகங்களை ஜெபித்தனர். பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி, பேராலய கோபுரங்கள் மட்டுமின்றி வேளாங்கண்ணி நகரமே மின்னொளி பந்தலில் ஜொலித்தது.

தமிழகம் மற்றும் வெளிநாடு :

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். 

ஆண்டுதோறும் பேராலய விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். 

ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் சேவியர் திடலில் வழிபாடு நடத்தப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
*

Share this story