சென்னையில் காய்ச்சல், இருமல், சளி பாதிப்பு பரவல் : 200 வார்டுகளில் சிறப்பு முகாம்..
 

fever

னை: சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒன்று வீதம் காய்ச்சல் முகாம்கள் நடந்தன. ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், மருந்தாளுனர், நர்சு, உதவியாளர் என 4 பேர் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். காலை 9 மணிக்கு மருத்துவ முகாம்கள் தொடங்கின.

காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, ரத்த சோகை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் இந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியிலும் சமுதாயக்கூடம், பள்ளிக்கூடம், முக்கியமான இடங்களில் சாமியானா பந்தல் போடப்பட்டு இந்த முகாம் நடத்தப்பட்டன.

காய்ச்சல் முகாம் நடப்பது குறித்து சுகாதாரத்துறை பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள தெருக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையும் படியுங்கள்: கவர்னருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது?- சபாநாயகர் அப்பாவு கேள்வி காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறலாம் என வீதிவீதியாக பிரசாரம் செய்தனர். இதனால் காய்ச்சல் முகாம்களில் காலையிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதால் முகாமிற்கு சென்று சிகிச்சை பெற்றனர். தொடர் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டது. சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் சுடுநீர் குடிக்கவும், மருந்து, மாத்திரைகள் முறையாக உட்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதுதவிர மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் இந்த முகாம்களில் உடல் பரிசோதனை செய்து மாத்திரை வழங்கப்பட்டன. முகாமில் சிகிச்சை பெற்ற மக்களுக்கு மருந்து, சத்து மாத்திரை, சிரப் போன்றவை வழங்கப்பட்டன. தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் தீவிரமாக பணியாற்றினர்.

காய்ச்சல் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து தொடர்ந்து நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன் தீப்சிங்பேடி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர்.

Share this story