உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்: 14 நாடாளுமன்ற தொகுதியில் திமுக இன்று பொதுக்கூட்டம்..

By 
stalinmk3

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.  இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக, ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு - புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.

பிப்ரவரி 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டங்களில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட – மாநகர – பகுதி – ஒன்றிய – நகர - பேரூர்க் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர், பி.எல்.ஏ-2, பி.எல்.சி. ஒருங்கிணைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து திமுகவினருக்குப் பயிற்சி தரும் வகையிலும், பொதுமக்களுக்கு பா.ஜ.க. - அ.தி.மு.க. மறைமுகக் கூட்டாளிகளின் நேரடித் துரோகங்களை அம்பலப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இத்தகைய கூட்டங்கள் நடைபெற்று வருவதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

முதல் நாளான பிப்ரவரி 16 ஆம் தேதி 11 நாடாளுமன்ற தொகுதிகளிலும், பிப்ரவரி 17 ஆம் தேதி 12 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மூன்றாம் நாளாக இன்று 14 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதில், திமுக மூத்த நிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.

திருவள்ளூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கருர், புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், தருமபுரி, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி, தென்காசி, சேலம், ஆரணி ஆகிய இன்று 14 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, திருச்சி சிவா, ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சிறப்புரையாற்றவுள்ளனர்.

Share this story