கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

corporation2

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற் குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.

தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959-ன் படி நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கவோ கூடாது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, தொடர்புடைய நபர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 11.1.2023 முதல் 1.2.2023 வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது ரூ.1,36,000 அபராதம் விதிக்கப்பட்டு, 340 நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மாநகரின் பொது இடங்கள் மற்றும் மாநகராட்சி, அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தெரு, சாலைகளின் பெயர் பலகைகள், இதர அறிவிப்பு பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story