மாணவி, மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை : போலீசார் தீவிர விசாரணை..

viluppuram

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே வயதுடைய சிறுமியும் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இவர்கள் தினமும் இரவு நேரங்களில் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இந்த விஷயம் இவர்களின் பெற்றோருக்கு தெரியாது. அதன்படி நேற்று இரவு 9 மணியளவில், மாணவனும், மாணவியும் கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கு பேசிக்கொண்டிருந்த மாணவன், மாணவியை திடீரென சுற்றி வளைத்தனர். பின்னர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதனை மாணவன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் மாணவனை தாக்கி கத்தியால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் மயங்கி விழுந்தான்.

அதன்பின்னர் 3 பேரும் கூட்டாக சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் மாணவியும் மயக்கமடைந்தார். பின்னர் மாணவன், மாணவியிடம் இருந்த 2 செல்போன்கள், வெள்ளி செயின், கொலுசு மற்றும் தங்க மோதிரத்தை பறித்து தப்பிச் சென்றனர். அவ்வழியே சென்ற பொதுமக்கள் மாணவனும், மாணவியும் மயங்கி நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற விக்கிவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் மாணவனையும், மாணவியையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், தகவலறிந்த டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவன்- மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மாணவனை தாக்கிவிட்டு, மாணவியை பலாத்காரம் செய்து தப்பிச்சென்ற 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தீவிர வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காதலுனுடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story