திருடர்களால் சப்-இன்ஸ்பெக்டர் கொலை : குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை...

By 
Sub-inspector killed by thieves 8 personnel to catch criminals ...

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51). 1995-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த இவர் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்துள்ளார். 

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், நேற்று இரவு ரோந்து பணிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

அவருடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஏட்டு சித்திரைவேல் என்பவரும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் திருவெறும்பூரை அடுத்த சின்னசூரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு இருள் சூழ்ந்த அடர்ந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்து உடனே தங்களது வாகனத்தை நிறுத்தினர். 

அந்த சமயம் அங்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால், உஷாரான பூமிநாதன் மற்றும் ஏட்டு அந்த பகுதியை நோக்கி சென்றனர்.

இதற்கிடையே 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் ஆடுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். அவர்கள் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்த போலீசார் தொடர்ந்து துரத்தினர். ஆனால், அந்த கும்பல் நிற்காமல் வேகம் காட்டினர்.

பரிதாப மரணம் :

இதற்கிடையே குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் ஏட்டு சித்திரைவேலால் கும்பலை துரத்தி செல்லமுடியவில்லை. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மட்டும் ஆடு திருடும் கும்பலை துரத்தி சென்றார். 

ஒரு கட்டத்தில் அந்த கும்பல் திருச்சி மாவட்டத்தை கடந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு சென்றனர். கீரனூரை அடுத்த களமாவூர் ரெயில்வே கேட்டை தாண்டி பள்ளத்துப்பட்டி அருகே சென்றபோது ஒரு வாகனத்தை பூமிநாதன் தடுத்து நிறுத்தினார். 

அவர்களிடம் விசாரித்தபோது, முன்னால் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் எஸ்.ஐ. பூமிநாதனுடன் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, பூமிநாதன் நவலூர் போலீஸ் நிலையத்தில் தன்னுடன் வேலை பார்த்து வரும் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரான கீரனூரை சேர்ந்த சேகர் என்பவரை உதவிக்காக செல்போனில் அழைத்தார். 

இதனால், தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ. பூமிநாதனை சரமாரியாக வெட்டினர். இதில், படுகாயம் அடைந்த பூமிநாதன் நடுரோட்டில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 

பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்நிலையில், உதவிக்கு அழைத்த மற்றொரு எஸ்.ஐ. சேகர் அங்கு வந்து பார்த்தபோது, பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதிக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கொலையாளிகள் நிச்சயம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதிரடியாக போலீசார் விசாரணையை தொடங்கினர்.

ஆய்வு :

அதேபோல் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிர ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையுண்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆடு திருடும் கும்பலால் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டது திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
*

Share this story