கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன் என் எண்ணங்களை உயர்த்தியது: பிரதமர் மோடி

By 
kanya5

பிரதமர் மோடி மக்களவை தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, மே 30ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்தார். ஜூன் 1ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு திரும்பினார். டெல்லி செல்லும்போது தனது கன்னியாகுமரி தியான அனுபவம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடியின் கடிதத்தில் கூறியிருப்பதாவது: "என் மனம் பல அனுபவங்களாலும், உணர்ச்சிகளாலும் நிரம்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக நான் நமது மாபெரும் தேசத் தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று வந்துள்ளேன். தேர்தல் உற்சாகம் என் இதயத்திலும், மனதிலும் எதிரொலித்தது இயல்பானது. பேரணிகளிலும், சாலை வாகனப் பேரணிகளிலும் பார்த்த முகங்கள் என் கண்முன்னே வந்தன.

நமது பெண் சக்தியின் ஆசிர்வாதம், நம்பிக்கை, பாசம், இவை அனைத்தும் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. என் கண்கள் ஈர மாகிக்கொண்டிருந்தன. நான் ஒரு தியான நிலைக்குள் நுழைந்தேன். ஒருபுறம் சூடான அரசியல் விவாதங்கள், தாக்குதல்கள், எதிர்தாக்குதல்கள், ஒரு தேர்தலுக்கே உரித்தான குற்றச் சாட்டுகளின் குரல்கள், வார்த்தைகள் என அவை அனைத்தும் ஒரு வெற்றிடத்தில் மறைந்தன. எனக்குள் ஒரு பற்றற்ற உணர்வு வளர்ந்தது. என் மனம் புற உலகில் இருந்து முற்றிலும் விலகியது.

இத்தகைய பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் 'தியானம் சவாலானதாக மாறுகிறது. ஆனால் கன்னியாகுமரி மண் மற்றும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகம் அதை சிரமமற்றதாக ஆக்கியது. நானே ஒரு வேட்பாளராக, எனது பிரசாரத்தை எனது அன்புக்குரிய காசி மக்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டு இங்கு வந்துள்ளேன்.

கன்னியாகுமரியில் இதே இடத்தில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தபோது என்ன அனுபவித்திருப்பார் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் தியானத்தின் ஒரு பகுதி இதேபோன்ற எண்ண ஓட்டத்தில் கழிந்தது. இந்த பற்றற்ற நிலைக்கு மத்தியில், அமைதி மற்றும் மவுனத்தின் மத்தியில், என் மனம் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்தை பற்றியும், பாரதத்தின் குறிக்கோள்களை பற்றியும் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தது.

கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன் என் எண்ணங்களுக்கு புதிய உயரங்களைக் கொடுத்தது. கடலின் பரந்த தன்மை என் எண்ணங்களை விரிவுபடுத்தியது. அடிவானத்தின் விரிவு தொடர்ந்து பிரபஞ்சத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள ஒற்றுமையை எனக்கு உணர்த்தியது. பல தசாப்தங்களுக்கு முன்பு இமயமலையின் மடியில் மேற்கொள்ளப்பட்ட தியானங்களும், அனுபவங்களும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது போல் தோன்றியது.

கன்னியாகுமரி எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாகும். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் ஏக்நாத் ரானடே தலைமையில் கட்டப்பட்டது. ஏக்நாத்துடன் விரிவாக பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மணிமண்டபம் கட்டப்பட்டபோது, கன்னியாகுமரி யிலும் சில காலம் செலவிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரையில் இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஆழமாக வேரூன்றிய ஒரு பொது அடையாளமாகும். அன்னை சக்தி கன்னியாகுமரியாக அவதரித்த 'சக்தி பீடம்' இது. இந்த தென்கோடியில், அன்னை சக்தி தவம் செய்து, பாரதத்தின் வடக்கு பகுதியில் இமயமலையில் உறையும் பகவான் சிவபெருமானுக்காக காத்திருந்தார்.

கன்னியாகுமரி சங்கமிக்கும் பூமி. நமது தேசத்தின் புனித நதிகள் பல்வேறு கடல்களில் கலக்கின்றன, இங்கோ கடல்கள் சங்கமமாகின்றன. பாரதத்தின் சித்தாந்த சங்கமம் என்ற மற்றொரு மாபெரும் சங்கமத்தை இங்கே நாம் காண்கிறோம். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்திமண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகியவை உள்ளன.

இந்த ஜாம்பவான்களின் சிந்தனை நீரோடைகள் இங்கு சங்கமித்து, தேசிய சிந்தனையின் சங்கமத்தை உருவாக்குகின்றன. இது தேச நிர்மாணத்துக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கிறது. கன்னியாகுமரியின் இந்த மண், குறிப்பாக பாரதத்தின் தேசியம் மற்றும் ஒற்றுமை உணர்வின் மீது சந்தேகம் கொண்ட எந்தவொரு நபருக்கும், ஒற்றுமையின் அழிக்க முடியாத செய்தியைத் தெரிவிக்கிறது.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் பிரமாண்டமான சிலை கடலில் இருந்து பாரத அன்னையின் அகன்று விரிந்துள்ள நிலத்தைப் பார்ப்பது போல் உள்ளது. இவரது திருக்குறள் தமிழ் மொழியின் மணிமகுடங்களில் ஒன்று. இது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியது. நமக்கும், தேசத்திற்கும் சிறந்ததை வழங்க நம்மை ஊக்குவிக்கிறது. அத்தகைய பெரும் புலவருக்கு எனது மரியாதையைச் செலுத்தியது எனது மிகப்பெரிய பாக்கியமாகும்.

நாட்டின் வளர்ச்சிப்பயணம், நமக்கு பெருமிதம் மற்றும் புகழ் சேர்த்துள்ள அதே வேளையில், 140 கோடி குடிமக்களுக்கும், அவர்களது பொறுப்புகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இப்போது, ஒரு நொடியை கூட வீணடிக்காமல், பெரும் கடமைகள் மற்றும் பெரிய அளவிலான இலக்குகளை நோக்கி, நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

நாட்டின் வளர்ச்சியை சர்வதேச அளவில் உற்றுநோக்குவதுடன், இதற்காக உள்நாட்டுத் திறமைகளையும் புரிந்துகொள்வது அவசியம். நாட்டின் வலிமையை நாம் அங்கீகரித்து, அவற்றை வளர்த்தெடுத்து, உலகின் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்த வேண்டும். நமது சீர்திருத்தங்களும், 2047-க்குள் லட்சிய பாரதத்தின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அமைய வேண்டும்.

நவீன யுகத்தில் பண்டைக்கால நற்பண்புகளை பின்பற்றும் அதேவேளையில், நமது பாரம்பரியத்தையும் புதுமையான வழியில் நாம் மறுவரையறை செய்வது அவசியம். நேர்மறை எண்ணம் இருந்தால்தான் வெற்றி மலரும். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், லட்சிய பாரதத்தை உரு வாக்குவதற்கான இலக்கு வெகுதொலைவில் இல்லை." இவ்வாறு பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share this story