தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு : 560 ரவுடிகள் கைது-தீவிர விசாரணை..

By 
Tamil Nadu DGP orders action 560 rowdies arrested

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

டி.ஜி.பி.சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர ஆணையாளர்கள் ஆகியோர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதிரடி நடவடிக்கை :

இந்நிலையில், தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் சற்று அதிகரித்தன. 

இதையடுத்து, இதுபோன்ற குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 48 மணிநேரம் ரவுடிகள் வேட்டையில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து, நேற்று மாலை 4 மணி முதல் ரவுடிகள் வேட்டை நடைபெற்று வருகிறது.

சென்னையிலும் ரவுடிகள் வேட்டை நேற்று மாலையில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையை போன்று தமிழகத்தில் உள்ள மற்ற மாநகர பகுதிகளிலும், மாவட்டங்களிலும் விடிய விடிய ரவுடிகள் வேட்டை நடைபெற்றது. 

பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து ரவுடிகளையும் வேட்டையாடி, கைது செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக களம் இறங்கினார்கள்.

இடைவிடாத சோதனை :

இதன்படி, கிராமப்புறங்கள் முதல் நகரப்பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் இடைவிடாமல் சோதனை நடத்தப்பட்டது.

தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில், ரவுடிகள் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை 4 மணிமுதல் நடத்தப்பட்டு வரும் சோதனையில் நூற்றுக்கணக்கான ரவுடிகள், போலீஸ் பிடியில் சிக்கினர். இன்று காலை வரையில் 560 ரவுடிகள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிர விசாரணை :

இன்று காலை வரையில், 560 குற்றவாளிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட 149 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

பழைய குற்றவாளிகள், கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருப்பவர்கள் உள்பட, அனைத்து விதமான ரவுடிகளையும் பிடித்து சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
*

Share this story