'தி கேரளா ஸ்டோரி' பட விவகாரம் குறித்து, தமிழக அரசு உத்தரவு

கேரள பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்பட 5 மொழிகளில் நாளை வெளியாகிரது. இந்த படத்துக்கு கேரள மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள இந்து பெண்கள், முஸ்லிமாக மதம் மாறி ஐ.எஸ். அமைப்பில் சேருவது போன்று படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்களுக்கும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தமிழக உளவு பிரிவு போலீசார் அரசுக்கு அறிக்கை ஒன்றை தயாரித்து அளித்துள்ளனர். அதில் தமிழக தியேட்டர்களில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்பட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் அமைப்பினரும் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி விரிவாக ஆய்வு செய்ய கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த படத்தை யாரும் வாங்கி வெளியிட முன்வரவில்லை. இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். அப்படி அவர் படத்தை வெளியிட்டால் பிரச்சினை ஏற்படுமா என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப செயலாற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாளை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டர்கள் பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.