தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு : விருதுநகர் மாவட்டம் முதலிடம்; முழு விவரம்..

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
* 2019-ல் 91.30% , 2020-ல் 92.34% , 2022-ல் 93.80%, 2023-ல் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* கொரோனா தொற்றால் 2021-ல் மட்டும் 100% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
* பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆண்கள் பள்ளிகளில் 87.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* பிளஸ் 2 தேர்வில் சிறைவாசிகள் 90 பேர் தேர்வெழுதிய நிலையில் 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 19-ம் தேதி தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* பிளஸ் 2 பொதுத்தேர்வில் 326 அரசு மேல்நிலை பள்ளிகளில் 100% தேர்ச்சி சதவீதத்தை பெற்று அசத்தி உள்ளது.
* 2,767 மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகள் - 89.80% அரசு உதவி பெறும் பள்ளிகள் - 95.99% தனியார் பள்ளிகள் - 99.08%
* கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 8,544 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்; கடந்த ஆண்டு : 23,957 இந்த ஆண்டு : 32,501
சென்னையில் தேர்ச்சி சதவீதம் :
* சென்னையில் 91.40% மாணவர்களும், 96.64% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 21,139 மாணவர்களும் 23,178 மாணவிகளும் தேர்வெழுதிய நிலையில் 94.14% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே 2 பேர் மட்டும் தமிழ் மொழியில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி, அரக்கோணம் மாணவி லக்ஷயா ஸ்ரீ தமிழ்ப்பாடத்தில் சதமடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்மொழி பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 690 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 15 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணக்கு பதிவியலில் 6573 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.32% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலைப்பிரிவுகளில் 81.89%, தொழிற்பாடப்பிரிவுகளில் 82.11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்' என்றார் .