சென்னையில் இளம்பெண் கடத்தல்; மடக்கி பிடித்த போலீஸ் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை..

By 
60kl

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 வயது இளம் பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல் பணிக்கு சென்ற நிலையில், அவரை திடீரென வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்றுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் காவல் துறையினர் துரித விசாரணையை மேற்கொண்டனர். அப்போது இளம் பெண்ணை கடத்திச் சென்ற கார் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டத்தை நோக்கி செல்வதை காவல் துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி மற்றும் சோதனை சாவடிகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் சுங்கச்சாவடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்த போது அதில் கடத்தப்பட்ட இளம் பெண் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தப்பியோட முயன்ற நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இளம் பெண்ணும், காரைக்குடியில் உள்ள தனது அத்தை மகனான சபாபதியும் (27). சிறு வயது முதலே காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக இளம்பெண் சபாபதியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த சபாபதி (27) தனது நண்பர்களான ஹரிஹரன் (20), அஜய் (25), மற்றும் ராஜேஷ் (39). ஆகியோருடன் சேர்ந்து அப்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this story