பா.ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் பரப்ப வேண்டும் : பிரதமர் மோடி அறிவுரை

bjpg

பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட்தான் தற்போதைய பாராளுமன்ற பதவிக் காலத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள கட்சி முழுமையான பட்ஜெட் ஆகும்.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. நேற்று காலை தொடங்கிய இந்த கூட்டம் மாலை வரை நீடித்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் கொள்கை முன்னெடுப்புகள், பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 400 நாட்களே உள்ளன. எனவே கடந்த 8½ ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்த சாதனைகளை மக்களிடம் பரப்ப வேண்டும். இதை சமூகத்தின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

பிரதமரின் ஆவாஸ் யோஜ்னா, உஜ்வாலா மற்றும் 81 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் போன்ற நலத்திட்டங்கள் அனைத்து ஜாதி, மதத்தை சேர்ந்த மக்களுக்கும், அனைத்து மாநிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்கும் எவ்வாறு பயன் அளித்தன என்பதை எடுத்து சொல்ல வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்கள் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு பலன் அளித்துள்ளன. அதே வேளையில் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்களின் நலன் கருதியும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிய அந்த திட்டங்களின் விவரங்களுடன் நடுத்தர வகுப்பினரை அணுக வேண்டும். அந்த திட்டங்கள் குறித்து அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

Share this story