இளம்பெண் உடலை 35 துண்டுகளாக வெட்டிய கொடூரம் : வாலிபர் வெறிச்செயல்..

murder7

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புட்காம் மாவட்டம் சோய்பக் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த 7-ந்தேதி திடீரென்று மாயமானார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரர் தன் வீர் அகமதுகான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில் தனது சகோதரி பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த பெண்ணுடன் கடைசியாக யாரெல்லாம் பேசியுள்ளனர் என்ற தகவலை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஷபீர்அகமது வானி என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் கடைசியாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஷபீரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர் அந்த இளம்பெண்ணை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் புதைத்ததாக திடுக்கிடும் தகவலை கூறினார். இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு :

ஷபீர் திருமண வரன்களை அமைத்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். அப்போது தன்வீர் அகமது குடும்பத்துக்கு அறிமுகமாகி உள்ளார். தன்வீர் தனது சகோதரியின் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று ஷபீரிடம் தெரிவித்தார். ஷபீர் ஓரிரு நாட்களில் ஒரு வரனின் புகைப்படத்தை தன்வீரிடம் கொடுத்து இந்த மாப்பிள்ளை உங்கள் தங்கைக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறினார்.

அந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்து தன்வீர் வீட்டில் அனைவரும் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டனர். ஆனால் தன்வீரின் சகோதரி, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து திருமணம் தள்ளிப்போனது.

இந்த நிலையில் ஷபீருக்கும், தன்வீரின் சகோதரிக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் செல்வது, ஊரை சுற்றிப்பார்ப்பது என்று இருந்துள்ளனர். ஷபீர் ஒரு கட்டத்தில் தன்வீரின் சகோதரியை காதலிக்க தொடங்கினார். சில மாதங்களாக அவர்கள் ஒன்றாக பழகி வந்த நிலையில் கடந்த மாதம் ஷபீர் தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.

ஆனால் அவரது காதலை தன்வீரின் சகோதரி ஏற்காததுடன் திருமணத்துக்கும் மறுத்துள்ளார். அதன்பிறகு ஷபீருடன் பழகுவதை அந்த பெண் நிறுத்தினார். இதை ஷபீர் எதிர்பார்க்கவில்லை. தன்னிடம் பேசுமாறு அந்த பெண்ணிடம் கெஞ்சினார். ஆனாலும் அந்த பெண் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார்.

கடந்த 7-ந்தேதி அந்த பெண்ணின் செல்போனுக்கு போன் செய்த ஷபீர் தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுதான் கடைசி முறை, இதன்பிறகு தொந்தரவு செய்ய மாட்டேன் என்று ஷபீர் கெஞ்சியுள்ளார். இதையடுத்து அந்த பெண் ஷபீரை சந்திக்க ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஷபீரின் வீட்டுக்கு அவர் சென்றார். அப்போது ஷபீர் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்தார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷபீர் கத்தியால் அந்த பெண்ணின் வயிற்றில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இதையடுத்து ஷபீர், அந்த பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டினார். பின்னர் அதை ஓம்புரா பகுதியில் பல்வேறு இடங்களில் புதைத்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஷபீரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்களை மீட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Share this story