வாட்ஸ்அப் மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதி தொடக்கம்..

metro7

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்களில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரயில் பயணத்துக்கு கவுண்டர்களில் டிக்கெட் வாங்கலாம். மேலும் பயணிகளுக்கு அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.2,500-ல் மாத பயணம் குரூப் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலி மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறும் வசதி இன்று தொடங்கப்பட்டது. இந்த வசதியை திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார். 83000 86000 என்ற எண்ணில் CMRL Live எனும் சாட் வழியே டிக்கெட்டை பதிவு செய்யலாம்.

செல்ல வேண்டிய இடத்திற்கான கட்டணத்தையும் வாட்ஸ்அப் மூலம் செலுத்தி உடனே டிக்கெட்டை பெறலாம். இந்த புதிய வசதி மூலம் ஒரு செல்போனில் இருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் 20 சதவீதம் தரப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணர்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ புறப்படும் போது, மெட்ரோ நிர்வாகம் கொடுத்த எண்ணுக்கு புறப்படும் இடம் மற்றும் சேறும் இடத்தை அனுப்பி கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெறலாம். பயணரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும் 'கியூஆர்' கோடை பயணத்தின் போது ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.

மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் கூறும்போது, "மெட்ரோ ரெயிலில் 2-ம் கட்ட திட்ட பணியில் சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்கி உள்ளது. இப்பணி 2026-ம் ஆண்டு முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரெயிலில் தினமும் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

உலகிலேயே அதிக பயணிகள் பயணம் செய்யும் மெட்ரோவாக சென்னை உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே மெட்ரோ ரெயில் அமைக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் மெட்ரோ ரெயிலில் ஏ.சி.யில் பயணம் செய்ய பலர் ஆர்வத்துடன் உள்ளனர் என்றார்.

Share this story