தொடரும் விசாரணை.! 15 கோடி ரூபாய் பணம் வாங்கியது ஏன்.?: ஆர்.கே. சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்..

By 
rks3

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம், முதலீடு செய்த ஒரு லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றி  2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ 36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் உரிய முறையில் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்தனர்.

மேலும் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவரையும் விசாரணைக்கு ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல்  தொடர்ந்து வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று முன் தினம் சென்னை திரும்பியவர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு நேற்று ஆஐராஜனார். அப்போது 100க்கும் மேற்பட்ட கேள்விகள் ஆர்.கே.சுரேஷிடம் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில்,  வைட் ரோஸ் என்ற திரைப்படத்திற்காக தான் ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் ரூசோவிடம் பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜசேகரை நடிகர் ஆர் கே சுரேஷ் துபாயில் சந்தித்தாரா என்பது குறித்து எல்லாம் ஆர் கே சுரேஷ் இடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும்  ரூசோவிடம் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ள நடிகர் ஆர் கே சுரேஷ் ,  ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் ரூசோவிடமிருந்து பணம் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ரூசோவிடமிருந்து பெறப்பட்ட பணத்தை திரைப்படத்திற்கு மட்டுமல்லாமல் சொந்த செலவிற்கும், கட்சி நிகழ்ச்சிக்கும் ஆர் கே சுரேஷ் செலவழித்துள்ளதாகவும தகவல் வெளியானது. மேலும் தயாரிப்பாளர் ரூசோ விற்கும் நடிகர் ஆர் கே சுரேஷுக்கும் இடையே உள்ள சினிமா பட ஒப்பந்தம் குறித்து ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணைக்கு எடுத்து வரச் சொல்லி உள்ளனர்.

ஆர் கே சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை திங்கட்கிழமை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அளிக்க உள்ளனர். இதனை தொடர்ந்து நீதிமன்ற அனுமதியோடு ஆர்.கே.சுரேஷ் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

Share this story