'தி கேரளா ஸ்டோரி' சினிமா : பாதுகாப்பு கருதி அதிரடி நடவடிக்கை

By 
tks5

கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள், முஸ்லிமாக மதம் மாறி ஐ.எஸ்.ஐ. எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்ற காட்சி அமைப்புகளுடன் எடுக்கப்பட்ட 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5-ந்தேதி தமிழகத்தில் வெளியானது.

இந்த படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் தான் 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களிலும், கோவையில் 3 தியேட்டர்களிலும் படம் வெளியானது.

இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியான தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் படம் வெளியான கடந்த 5-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 4 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட்டால் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சி சார்பிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் படி அமைந்தகரை சந்திப்பில் உள்ள ஸ்கைவாக் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இப்படி கடந்த 2 நாட்களாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றது.

இதனால் தி கேரளா ஸ்டோரி படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத்தொடர்ந்து தியேட்டர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் தி கேரளா ஸ்டோரி படத்தை நிறுத்தியுள்ளதாக தியேட்டர்கள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்கள் முன்பு முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றுள்ளதால் திரையரங்குகளின் பாதுகாப்பு கருதி அந்த படத்தை இன்று முதல் நிறுத்துவது என்று முடிவெடுத்துள்ளோம். இந்த படம் தமிழகம் முழுவதும் வெளியாகவில்லை. சென்னையில் 13 தியேட்டர்களிலும், கோவையில் 3 தியேட்டரிலும் மட்டுமே படம் வெளியாகி இருந்தது.

இந்த 2 இடங்களிலும் தியேட்டர்களில் இன்றுமுதல் படம் திரையிடப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்ரீதர் தெரிவித்தார். 'தி கேரளா ஸ்டோரி' படம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போராட்டம் காரணமாக தியேட்டர்கள் முன்பு பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் படம் நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து தியேட்டர்களில் நீடித்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

Share this story