விபத்தான ஹெலிகாப்டரின் விமானி, தன் குடும்பத்தினருடன் பேசிய கடைசி உரையாடல்..

By 
The last conversation the pilot of the crashed helicopter had with his family.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டரை இயக்கிய விமானி, தனது குடும்பத்தினருடன் கடைசியாக உரையாடிய தகவல் வெளிவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. 

13 பேர் பரிதாப உயிரிழப்பு :

இந்த கோர விபத்தில், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மிதுலிஹா உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய விமானப்படை கேப்டன் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். 

அவருக்கு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற  எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டரின் தலைமை பைலட் தான் பி.எஸ். சவுகான் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவைச் சேர்ந்த அவர் தனது தாயார் சுசிலா சவுகானுடன் கடைசியாக, விபத்து நடந்த முந்தைய நாள் இரவு தொலைபேசியில் உரையாடியுள்ளார். 

ஆனால், அதுவே தனது குடும்பத்தினருடனான அவருடைய கடைசி உரையாடலாக மாறி இருக்கிறது.

தாய்-தந்தை கண்ணீர் :

இந்நிலையில், விபத்து குறித்த செய்தியை அறிந்த விமானப்படை விங் கமாண்டர் பி எஸ் சவுகானின் மாமனார், சவுகானின் தாயாரை தொடர்புகொண்டு டிவியை பார்க்குமாறு கூறியிருக்கிறார்.தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்த செய்தியை பார்த்த உடனேயே, அவரது தாயார் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார்.

அவருடைய தாயார் சுசீலா, விபத்து நடந்த முந்தைய நாளில், தனது மகனுடன் தொலைபேசியில் உரையாடியதை நினைவு கூர்ந்துள்ளார். அவருடைய குடும்பத்தில், இவர் தான் கடைசி மகன் ஆவார். 

அவர் அனைவருடனும் அன்பாக பழகக்கூடியவர் என்று தெரிவித்தார்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானப்படை விங் கமாண்டர் பி எஸ் சவுகான், மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் இருக்கும் சைனிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். அவர் 2000ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.

அவருக்கு 2007-ம் ஆண்டு  திருமணம் நடந்தது. அவருக்கு 12 வயதில் ஒரு மகளும் 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவருக்கு நான்கு மூத்த சகோதரிகள் இருக்கின்றனர். 

அனைவரிடத்திலும் மிகவும் அன்பாகப் பேசக்கூடிய என் மகன் இறந்ததை டிவி செய்திகள் மூலம் அறிந்து, அதிர்ச்சியடைந்தோம் என சவுகானின் தந்தை சுரேந்திர சிங் சவுகான் கண்ணீருடன் தெரிவித்தார்.

எனினும், மறைந்த விங் கமாண்டர் பி.எஸ். சவுகானின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும்  தங்களுக்கு வந்து சேரவில்லை என்று அவருடைய உறவினர் தெரிவித்தார். 

மொத்த குடும்பமும் இந்த துயர செய்தியை கேட்டு, அதிர்ச்சி கலந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.

உயிருடன் மீட்பு :

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவரை, பெங்களூருவில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உயர் சிகிச்சை அளிக்கலாமா என பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

Share this story