ஒன்றரை மணிநேரம் நடந்த விசாரணை; கேட்கப்பட்ட கேள்விகள் என்ன? பத்திரிகையாளர்களை அதிர வைத்த மன்சூர் அலிகான்..

By 
mansoor2

திரிஷா குறித்து சர்ச்சையான விதத்தில் பேசியபுகார் தொடர்பாக இன்று, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

'லியோ' படத்தில் நடித்த போது, நடிகை திரிஷாவுடன் தனக்கு காட்சிகள் இல்லை என்பதை மிகவும் சர்ச்சையான விதத்தில் வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என டிஜிபிக்கு கோரிக்கை வைத்தது.

இதை தொடர்ந்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டும் என அவருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பி இருந்தனர்.

மேலும் விசாரணைக்கு பயந்து மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் இன்று மதியம் 2:30 மணிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் அதிரடியாக ஆஜரானார். காவல் நிலையத்திற்கு வந்த போது, உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு ஆஜராகி உள்ளதாக தெரிவித்த அவர், முன்ஜாமின் வாங்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுவை  வாபஸ் பெற்று விட்டதாகவும், தலைமறைவாகும் ஆள் நான் இல்லை என ஆவேசமாக பேசினார்.

இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானிடம் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போலீஸ் சார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியே வந்த மன்சூர் அலிகானிடம் பத்திரிகையாளர்கள் விசாரணை குறித்து பல கேள்விகளை எழுப்பிய போது, திரிஷா கிருஷ்ணன் என்பவரை பற்றி நான் தனிப்பட்ட முறையில் பேசவில்லை, ஒரு நடிகையாக அவரை மிகவும் மதிக்கிறேன் என கூறினார்.

அதே போல் போலீசார், திரிஷா குறித்து அவதூறாக பேசிய வீடியோ குறித்து, மன்சூர் அலிகானிடம் பல கேள்விகளை எழுப்பியதாகவும், அதற்கு முழு வீடியோவை பார்க்க சொல்லி மன்சூர் அலிகான் தரப்பு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இது தன்னை பழிவாங்கும் நோக்கில் வெளியிடப்பட்ட  வீடியோ என்று, மன்சூர் அலிகான் விளக்கம் கொடுத்துள்ளாராம்.

விசாரணை முடித்து வெளியே வந்த மன்சூர் அலிகானை சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள்... பல கேள்விகளை எழுப்பிய போதும், திரிஷாவை நடிகையாக மிகவும் மதிக்கிறேன் என்று ஓரிரு வார்த்தை மட்டுமே பேசிவிட்டு, நீங்கள் செய்ததற்கு தான் இங்கே வந்து நிற்கிறேன்... என கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றது, பத்திரிகையாளர்கள் அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

Share this story