உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்க வேண்டிய அவசியம் இல்லை..! உயர் நீதிமன்றம் அதிரடி

By 
sana1

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த ஆண்டு 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 

"சனாதன தர்மத்தை நாம் எதிர்க்கக் கூடாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை எதிர்க்க மாட்டோம். ஆனால் ஒழிக்கவே முயற்சிப்போம் என தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து  உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இதே போல இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர், அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும், மற்றொரு செயலாளர் கிஷோர் குமார், அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் ஆ.ராசாவிற்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி  கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த்  விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து,  கடந்த ஆண்டு நவம்பர் 23 ம் தேதி  இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த  வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை என்ற போதும், மனுதாரர் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி, வழக்குகளை முடித்து வைத்தார்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு  கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அது முழுமையான புரிதலுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, அந்த கருத்துகள் எந்த ஒரு நம்பிக்கைக்கும்  அழிவை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களையே தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பொது இடங்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், உண்மை விவரங்களின் அடிப்படையில்  துல்லியமாக இருக்க வேண்டும். எந்த கொள்கையை பின்பற்றுபவராக இருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சனாதன  ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் மட்டுமே அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத முடியாது எனக் கூறிய நீதிபதி, சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கொரோனா, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியதை பொருத்தவரை, இந்துத்துவத்தை பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகளில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே இந்திய அரசியல் சட்டமும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும், மக்கள் பிரதிநிதிகள் தகுதியிழப்பு ஆகும் எனக் கூறிய நீதிபதி, சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் தண்டனை ஏதும் விதிக்கப்படாத நிலையில், முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளின் அடிப்படையில், எந்த தகுதியில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்கும்படி உத்தரவிட முடியாது. மனுதாரர்கள் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி, வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.

Share this story