என் கணவரை சாகடிச்சு என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க; என்னுடைய சாவுக்கு இவங்கதான் காரணம்.! - சிக்கியது கடிதம்..

By 
aana

சென்னையில் பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் (எ) குட்டி அப்பு (23), அவரது நண்பர்களான விஷ்ணு ராஜ் (25), ஸ்ரீ ராம் (18), ஜோதிலிங்கம் (25), ஸ்ரீபன் குமார் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

என் சாவிற்கு காரணம் தந்தை துரைக்குமார், தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான் என இளம்பெண் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன்(26). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் ஜல்லடையாம்பேட்டை  கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு ஷர்மிளாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,  எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஷர்மிளாவை பிரவீன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் பள்ளிக்கரணையில்  இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இதனால், பிரவீன் மீது ஷர்மிளா வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி இரவு பள்ளிக்கரணையில் உள்ள ஜாலி பே பார் என்ற மதுபான விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது பிரவீனை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் (எ) குட்டி அப்பு (23), அவரது நண்பர்களான விஷ்ணு ராஜ் (25), ஸ்ரீ ராம் (18), ஜோதிலிங்கம் (25), ஸ்ரீபன் குமார் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், மாமனார், மாமியார் ஆகியோருடன் வசித்து வந்த ஷர்மிளா, பிரவீன் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால், கடந்த 14ம் தேதி ஷர்மிளா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரவீன் குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு   8 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஷர்மிளா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷர்மிளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் ஷர்மிளாவின் அறையை சோதனை செய்த போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், என்னால் என் கணவர் பிரவீன் இல்லாமல் இருக்க முடியல. நான் சாகப் போறேன். என் சாவிற்கு காரணம் தந்தை துரைக்குமார், தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான். பிரவீனை சாகடிச்சு என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. எங்களை வாழ விடாம பண்ணிட்டாங்க. அவன் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக அந்த கடிதத்தில் எழுதி இருந்தது.

 

Share this story