அமைச்சர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அவசர உத்தரவு

By 
Chief Stalin's urgent order To the ministers

1.25 லட்சம் ஏக்கர் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய, 6 அமைச்சர்கள் கொண்ட குழு உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

இதுகுறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட ஏதுவாக முதலமைச்சருக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story