ரயிலில் பயணிக்க, 2 டோஸ் தடுப்பூசிச் சான்று கட்டாயம் : அதிரடி அறிவிப்பு

To travel by train, 2 dose vaccination certificate is mandatory Notice of Action

தமிழகத்தில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இருப்பினும், சென்னையில் நாளை 50% இருக்கைகளுடன் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை இயங்காது.

மாநில அரசின் வழிகாட்டுதல்களின்படி, 50 சதவீதம் என்ற அடிப்படையில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே, ரயில்களில் பயணிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள் :

இந்த சூழலில், ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ளது. 

அதில், முக்கியமாக ரயில்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாதம் 31 ஆம் தேதி வரை மின்சார ரயில்களில் பயணிக்க, தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, பத்திரிக்கைத்துறை, முக்கிய அரசுப் பணிகளுக்காக செல்பவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே நாளை அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது, 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி நாளை மறுநாள் முதல் தற்காலிக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எச்சரிக்கை :

பயணிகள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், முக கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தெற்கு ரயில்வேயின் இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 10 ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
*

Share this story