மிகவும் மோசம் : மன்மோகன் சிங் வருத்தம்
 

By 
Too bad Manmohan Singh is upset

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நாட்டு மக்கள் அனைவரும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி, தங்களை நோய்த்தொற்றில்  இருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும். 

சிந்தனைக்கான நேரம் :

இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தலைமையில், தாராளமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இப்போது நான் நினைவு கூருகிறேன்.

அப்போது என்னுடைய முதல் பட்ஜெட் உரையில் நான், விக்டர் ஹியூகோவின், 'ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்றால், உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது' என்ற புகழ்பெற்ற தத்துவத்தை அவையில் முன்மொழிந்திருந்தேன்.

ஆனால், இன்று 30 வருடங்களுக்குப் பிறகு நாம் கடந்து கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம் இன்னும் வெகுதூரம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி :

பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவின் மகத்தான பொருளாதார வளர்ச்சியைப் பெருமையுடன் திரும்பிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 

ஆனால், கொரோனா தொற்றால் சமீபமாக, நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பாதிப்புகளின் காரணமாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறேன். 

அதேபோல், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிடும்போது, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதன் காரணமாக, நாம் ஏராளமான உயிர்களை இழந்துவிட்டோம்.

மிகவும் மோசம் :

இன்று இந்தியாவின் பொருளாதாரம் 3 டிரில்லியன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், இது நாம் மகிழ்ச்சி அடைவதற்கான நேரமல்ல. ஆராய்ந்து, சிந்தித்து, செயல்பட வேண்டிய நேரம். 

தற்போதைய பொருளாதார சூழலில், 1991 நெருக்கடி காலகட்டத்தை விடவும், வளர்ச்சியை நோக்கி முன்னேறும் நமது பாதையானது மிகவும் மோசமாக இருக்கிறது. 

ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு, நம்முடைய முன்னுரிமைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

1991-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பின்னர், இந்த 30 ஆண்டுகளில் அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ் இந்தியா பல கட்டங்களாக முன்னேறி இருக்கிறது. 

இன்று இந்தியா மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உயர்ந்திருக்கிறது. கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதன் மூலம் நாட்டு மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளோம். 

இந்த முயற்சியை மேற்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து, நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்' என மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

30 ஆண்டுகள் நிறைவு :

1991-ல் மன்மோகன் சிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், மிகவும் மோசமான நிலையிலிருந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுத்தன. மக்கள் வாழ்வாதாரத்திலும், தொழில்துறைகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 

மேலும், இந்தியாவின் உற்பத்தி, சேவை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகள் உள்ளிட்டவை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டன. 

மன்மோகன் சிங்கின் பொருளாதார தாராளமய நடவடிக்கை இன்று வரையிலும், மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகப் பொருளாதார நிபுணர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொருளாதார தாராளமய கொள்கையின் மூலம் இந்தியப் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டு, இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்த அறிக்கையை மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார்.

Share this story