போக்குவரத்து விதிமீறல் : புதிய நடைமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

traf3

சாலை போக்குவரத்தை கண்காணித்து விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும். போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடையில் கேமராவைபொருத்தி வாகன போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும்.

போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்களுடன் கூடிய ரசீது மின்னஞ்சல், குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும். அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


 

Share this story