சென்னையில் 51 மையங்களில் தடுப்பூசி போடும் பணி, மீண்டும் தொடங்கியது..

By 
Vaccination work resumed at 51 centers in Chennai.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலைக்கு பிறகு தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், அந்த அளவிற்கு தடுப்பூசி இருப்பு இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டு அடிக்கடி நிறுத்தப்படுகிறது.

மத்திய அரசு உறுதி்:

இந்த மாதத்தில் 72 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி வினியோகம் இல்லாததால் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் (5-ந் தேதி) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது.

இருப்பில் இருந்த தடுப்பூசிகளும் 6-ந் தேதி வினியோகிக்கப்பட்டது. 51,532 தடுப்பூசிகள் அன்று செலுத்தப்பட்டன. நேற்று 28,270 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதுவரையில் ஒரு கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 402 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது.

மையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி வந்தால் மட்டுமே முழுமையான அளவு போட முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

தடுப்பூசி போடும் பணி :

சென்னையில் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி போடும் பணி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சென்னைக்கு 12 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை மையங்களுக்கு மாநகராட்சி அனுப்பியது. 

இதையடுத்து, இன்று மீண்டும் தடுப்பூசி போடும் பணி 51 மையங்களில் தொடங்கியது. ஒவ்வொரு மையத்திற்கும் கோவேக்சின் 50, கோவிஷீல்டு 100 என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பொதுமக்கள் ஆர்வம் :

7,650 தடுப்பூசிகள் இன்று செலுத்தப்படுகிறது. 3 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்தனர். ஒவ்வொரு மையத்திலும் குறைந்த அளவில் இருப்பு இருந்ததால் அதற்கான டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மையங்களிலும் 150 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி வந்தால்தான், தேவையான அளவு பொதுமக்களுக்கு செலுத்தப்படும். அதனை அதிக அளவு பெறுவதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி செல்கிறார்.

Share this story