கேரளாவில், வைக்கம் நூற்றாண்டு விழா : முதலமைச்சர் ஸ்டாலின் இலட்சினை வெளியிடுகிறார்..
 

By 
mksp

கடந்த 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளாவில் வைக்கம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றி உள்ள வீதிகளில் ஒடுக்கப்பட்டவர்கள் நடந்து செல்லவே கூடாது என்றிருந்த நிலையை எதிர்த்து, அப்போது நடைபெற்ற போராட்டத்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனால் அவர் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். அந்த போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று வைக்கத்தில் நடைபெறுகிறது.

கேரள அரசு சார்பில் நடத்தப்படும் இந்த நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த 22-ந்தேதி கடிதம் எழுதி இருந்தார். கேரள மந்திரி சாஜி செரியன் சென்னைக்கு நேரில் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அந்த கடிதத்தை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருவதாக இசைவு தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கொச்சி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து சாலை மார்க்கமாக குமரகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுத்தார். அவரை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பிற்பகலில் விடுதியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கம் புறப்பட்டுச் செல்கிறார்.

அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள நினைவு தூணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தி வைக்கம் போராட்ட வீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்துகின்றனர். அதன் பிறகு அங்கு நடைபெறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் இரு மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கிறார்கள்.

இதில் நூற்றாண்டு விழா லோகோவை (இலட்சினை) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட, கேரள பெண் எம்.எல்.ஏ. ஆஷா பெற்றுக் கொள்கிறார். வைக்கம் சத்தியாகிரக புத்தகத்தை பினராயி விஜயன் வெளியிட தாமஸ் எம்.பி. பெற்றுக்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து விழாவில் இரு மாநில முதலமைச்சர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலையில் சாலை மார்க்கமாக கொச்சின் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தனியார் விடுதியில் தங்குகிறார்.

அதன் பிறகு நாளை காலை விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். வைக்கத்தில் இரு மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி என்பதால் போலீசாரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Share this story