தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையாக விக்ரமனின் மனைவி: மருத்துவ குழுவோடு வீட்டிற்கே சென்ற மா.சுப்பிரமணியன்..

By 
vik1

புது வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவால் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரமன், இவரின் முதல் படமே தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான இரண்டு விருதை பெற்றது. இதனையடுத்து கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் விக்ரமனின் மனைவி ஜெயப்ரியா ஒரு குச்சிப்புடி நடன கலைஞர், 

கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 5 வருட காலமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார். இது தொடர்பாக யூடியூப் ஒன்றிற்கு பேட்டியளித்த விக்ரமன், என்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இதனால் தான் நான் படங்களை இயக்கவில்லை என்று கூறியிருந்தார். 

மேலும், எனது மனைவிக்கு உயரிய சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்தநிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் உள்ள விக்ரமன் வீட்டிற்கு மருத்துவ குழுவோடு நேரில் சென்று விக்ரமனின் மனைவி ஜெயப்ரியா உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவர்களும் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்தனர். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் விக்ரமன், எனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு ஐந்து வருடமாக படுத்த படுக்கையாகவே இருக்கிறார். தனியார் மருத்துவமனையில் முதுகு பகுதியில் செய்த தவறான அறுவை சிகிச்சையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் படுத்த படுக்கையாக உள்ளார்.

இது தொடர்பாக youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தேன். அப்போது முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.  என் மனைவிக்கு உயரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இதனை அடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் என் வீட்டிற்கு வந்தார்.

அமைச்சர் வீட்டிற்கு வரும்பொழுது டாக்டர் பட்டாளத்தையே கூட்டி வந்தார். கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உடன் வந்தனர். நல்ல சிகிச்சை கொடுத்து விரைவில் உடல் நலம் முன்னேறுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை. நான் மருத்துவமனை பெயரையும்  குறிப்பிடவில்லை. எனது மனைவி உடல்நிலை குணமடைந்தால் போதும் எனவும் விக்ரமன் தெரிவித்தார். 

இதனையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், நியூராலஜி மருத்துவர்கள் எல்லாம் பரிசோதித்தார்கள். தற்போது பயப்படக்கூடிய சூழ்நிலை எதுவும் இல்லை நல்ல நிலையில் உள்ளார்.  இயக்குனர் விக்ரமன்  தான் சற்று  பயத்தில் உள்ளார். நியூராலஜி, நியூரோ சர்ஜரி, ஆர்த்தோ ரேடியாலஜி, டயாபடீஸ் மருத்துவர்கள் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்தார்கள். விரைவில் நல்ல உடல்நிலை அடைவார்கள் என்று தெரிவித்தனர். வீட்டில் இருந்தே சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கூறினார். 

 

Share this story